eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்தினூடாக வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு 03.10.2023 அன்று மேல்மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடமாகாணத்தின் இந்நிகழ்வு வடமாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திருமதி. சுஜீவா சிவதாஸ் தலைமையில் கௌரவ ஆளுநர் செயலக மாநாட்டு மண்டபத்தில் 03.10.2023 அன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதிப் பிரதம செயலாளர்கள், வடமாகாண சுற்றுலாத்துறை அமையத்தின் தலைவர் அ.பத்திநாதன் அவர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களுடன் வடமாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் பிரதான நோக்கம் சகல மாகாணங்களின் வாகனங்களினதும் வருமானவரி அனுமதிப்பத்திரங்களினை பொதுமக்கள் தமது சொந்த மாகாணங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய வசதியை பொதுமக்களுக்கு ஏற்படுத்திக்கொடுப்பதாகும். எனினும் இப்புதிய திட்டத்தின் கீழ் வடமாகாணத்திற்குரிய வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய மாகாணங்களில் வாகனங்களுக்கான வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் மிக விரைவில் குறுகிய முன்னறிவித்தலுடன் ஆரம்பிக்கப்படும்.
இந்நிகழ்வின் போது eRL 2.0 நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக 05 பயனாளிகளுக்கு வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் இதுவரை காலமும் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கலின் போது புகைப்பரிசோதனை அறிக்கை மற்றும் காப்புறுதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றுடன் வாகனங்களின் தகுதிச்சான்றிதழும் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் வாகனங்களுக்கான வழித்தட அனுமதிப்பத்திரங்களும் இத்திட்டத்தில் சேர்ப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.