199 வேலைத்திட்டங்கள் ரூ.488.169 மில்லியன் செலவில் முன்னெடுப்பு – பணிகளை துரிதப்படுத்த ஆளுநர் வலியுறுத்தல்.

வடக்கு மாகாணத்தில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறை மற்றும் தொழில்முனைவோர் மேம்பாடு, வர்த்தக வாணிபம் ஆகிய துறைகளை உள்ளடக்கிய அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்தி, எதிர்பார்க்கப்படும் பயன்களை மக்களுக்கு விரைவாகக் கொண்டு சேர்க்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

குறித்த அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள தொழிற்துறைத் திணைக்களம், சமூக சேவைகள் திணைக்களம், கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு ஆகியவற்றின் மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று (05.10.2026) திங்கட்கிழமை மாலை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு அறிவுறுத்தினார்.

அமைச்சு மற்றும் அதன் கீழுள்ள திணைக்களங்கள் ஊடாக தற்போது 199 வேலைத்திட்டங்கள் 488.169 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் தற்போதைய முன்னேற்றம், எதிர்கொள்ளப்படும் சவால்கள், பணிகளை நிறைவு செய்வதில் காணப்படும் தாமதங்களுக்கான காரணங்கள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டன.

ஒவ்வொரு திட்டமும் நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் நிறைவு செய்யப்பட்டு, அதன் பயன் மக்களைச் சென்றடைவது முக்கியம் என வலியுறுத்திய ஆளுநர், திட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் தடைகளை உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உடனடியாகத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ஒரு விடயம் தொடர்பில் கடிதங்களை அனுப்பி வைத்துவிட்டு அடுத்தகட்ட நடவடிக்கைக்காகக் காத்திருப்பதைத் தவிர்த்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்புகொண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தி, தேவையான முடிவுகளை விரைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.

அத்துடன், திட்டங்கள் வெறுமனே நிதி ஒதுக்கீடுகளாக நிலைத்திருக்காமல், அவை எதிர்பார்க்கப்படும் சமூக மற்றும் பொருளாதார பயன்களை உருவாக்கும் வகையில் வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த மாதாந்த முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், தொழிற்துறைத் திணைக்களத்தின் பணிப்பாளர், சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர், கட்டடங்கள் திணைக்களத்தின் மேலதிக மாகாணப் பணிப்பாளர், மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.