“விவசாயிகளைத் தொழில்முனைவோராக மாற்றுவதே எமது இலக்கு” – வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதி

பண்ணைகளில் வெறும் கூலித் தொழிலாளிகளாக இல்லாமல், விவசாயிகளைச் சிறந்த பண்ணையாளர்களாகவும் தொழில்முனைவோராகவும் மாற்றுவதே எங்களின் பிரதான இலக்காகும். வடக்கு மக்கள் எத்தகைய நெருக்கடியிலும் தன்னிறைவான வாழ்க்கை வாழ்வதற்குத் துணைநிற்கும் விவசாயிகளை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் நன்னீர் மீன்பிடிச் சங்கங்களுக்கான கௌரவிப்பு விழா இன்று வியாழக்கிழமை (20.11.2025) மன்னார், நானாட்டான் பிரதேச சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. அமைச்சின் செயலாளர் எஸ்.சிவஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

விவசாயம், கால்நடைத் துறை, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி ஆகியவையே வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தின் அடித்தளம். இவை எமது பொருளாதாரத்தை மட்டுமல்ல, சமூகத்தின் கலாசார அடையாளத்தையும் உருவாக்குகின்றன. இத்துறைகளை எமது முன்னோர் வாழ்வியலோடு இணைத்திருந்தனர். ஆனால் இன்று நிலைமை மாறியுள்ளது. எனவே, இத்துறைகளைச் சார்ந்தவர்களைக் கௌரவிப்பதன் மூலமே இளைய சமுதாயத்தை இத்துறைகளை நோக்கி ஈர்க்க முடியும்.

இன்றைய நிகழ்வில் இடம்பெற்ற விழிப்புணர்வு நாடகம், இரசாயன உரங்கள் மற்றும் நச்சு கிருமிநாசினிகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தெளிவாக உணர்த்தியது. அதிக விளைச்சலைத் தரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் அதேவேளை, இயற்கை உரம் மற்றும் பாரம்பரிய முறைகளுக்கு நாம் திரும்ப வேண்டும். நீண்ட காலச் சவால்களுக்குப் பின்னர், வடக்கு மாகாணம் மீண்டும் தன்னிறைவை நோக்கி நகர்கிறது. இலங்கையிலேயே வளமான பிரதேசமாக வடக்கு மாகாணம் திகழ்ந்தாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எமது பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. இதனை மாற்றியமைக்க விவசாயிகளால் மட்டுமே முடியும்.

வடக்கு மாகாணம் சுற்றுலாத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. 2026ஆம் ஆண்டின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை ‘லோன்லி பிளனெட்’ சஞ்சிகை அடையாளப்படுத்தியிருப்பது எமக்குக் கிடைத்த பெரும் வாய்ப்பாகும். விவசாயத்தையும் சுற்றுலாவையும் இணைக்கும் ‘விவசாயச் சுற்றுலா’ (Agro-Tourism) வருமானத்தை ஈட்டக்கூடிய முக்கிய துறையாக உள்ளது. எமது உணவுப் பொருட்கள் மற்றும் பாரம்பரிய பண்ணை அனுபவங்கள் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் ஈர்க்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலில் விவசாயத் துறைக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நவீன விதைகளைப் அறிமுகப்படுத்தல், பண்ணைப் பயிற்சிகளை அதிகரித்தல், நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டும் செயல்முறைகளை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை மாகாண நிர்வாகம் மேற்கொள்ளவுள்ளது, என்றார்.

இதன்போது, வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மற்றும் மாகாண மட்டத்திலும் 7 பிரிவுகளின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகள், பண்ணையாளர்கள் மற்றும் மீன்பிடிச் சங்கங்களுக்கு விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. அத்துடன் குறித்தொதுக்கப்பட்ட நன்கொடை நிதியின் கீழ் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், மன்னார் மாவட்டச் செயலர் க.கனகேஸ்வரன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர், பிரதேச செயலாளர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.