யாழ் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் நோக்கில் விளையாட்டு மைதானத்திற்கான பொருத்தமான இடத்தெரிவு குறித்த கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களுடைய தலைமையில் 15 டிசெம்பர் 2020 அன்று மாலை 2.30 ற்கு இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்பு செயலாளர், உதவிச் செயலாளர், சுற்றுலாத்துறை தலைவர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), உதவி ஆணையாளர்(காணி), கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர்கள், யாழ் மாநகர சபை ஆணையாளர், மற்றும் விளையாட்டு துறைசார் .அதிகாரிகள், பங்குதாரர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
யாழ் மாவட்டத்தில் விளையாட்டு மைதானத்தை அமைத்தல் மற்றும் அதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி வருமான வழிவகைகளை அதிகரித்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த கௌரவ ஆளுநர் அவர்கள்; செம்மணிப் பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட இடத்தின் உரிமைக்கு, உரித்தான தரப்பினரை உறுதிப்படுத்தும்படியும் அதன்பின்னர் அதற்கான செயற்திட்டத்தினை தயாரித்து உரிய திணைக்களங்களிடமிருந்து அனுமதியை பெற்று திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆலோசனை வழங்கினார்.
மேலும், அபிவிருத்தி என்ற பெயரில் அனர்த்தங்கள் இடம்பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி இடத்தெரிவில் சூழல் காரணிகளையும் அதன் சாதக பாதக தன்மைகளையும் பரிசீலித்து அடுத்தகட்ட நகர்வுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.