விபத்துக்களை தணிப்பது மற்றும் தடுப்பது தொடர்பான பொறிமுறையை உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை மாலை (09.07.2025) நடைபெற்றது.
வடக்கு மாகாணத்தில் விபத்துக்கள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக ஆளுநர் தனது முன்னுரையில் குறிப்பிட்டார்.
தொடர்ந்து விபத்துத் தணிப்புத் தொடர்பான விடயத்தை தன்னார்வமாக முன்னெடுக்கும், குழந்தை மருத்துவ நிபுணர் பி.சயந்தன் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். ‘பாதுகாப்பான வீதி, பாதுகாப்பான சுகாதாரம்’ (Safe Road, Safe health) என்ற தொனிப்பொருளில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்ற யோசனையை அவர் முன்வைத்தார்.
யாழ். மாவட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கையும் உயிரிழப்புக்களும் அதிகரித்துச் செல்வதாக அவர் குறிப்பிட்டார். இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிகளவு விபத்துக்களை எதிர்கொள்கின்றன என்ற தரவையும் முன்வைத்தார். விபத்துக்கள், உயிரிழப்புக்களைக் குறைத்தல், மாணவர்கள் மற்றும் சாரதிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், நிலைத்து நிற்கக்கூடிய பாதுகாப்பான கலாசாரத்தை உருவாக்குதல் என்ற இலக்கை நிர்ணயித்துச் செயற்பட வேண்டும் என்றும் கோரினார்.
இதன் பின்னர், யாழ். பிராந்திய சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் யாழ்ப்பாணப் பிராந்தியத்தில் இடம்பெற்ற விபத்துக்கள், அறவிடப்பட்ட தண்டப்பணம் தொடர்பான விவரங்களை முன்வைத்ததுடன், விபத்துக்களுக்கான காரணிகள், வீதிகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் தெரியப்படுத்தினார். மேலும், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறாக வீதிகளில் காணப்படும் அனைத்தையும் அகற்றுவதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் ஒத்துழைக்குமாக இருந்தால் அதனைச் செயற்படுத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.
முதல்கட்டமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்புணர்வுச் செயற்பாட்டை ஆரம்பிப்பது என்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாணப் பிராந்திய சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் மற்றும் பொதுமுகாமையாளர், முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.