மன்னார் மாவட்டத்தில் வருடாந்தம் சராசரியாக 50000 ஏக்கர் விஸ்தீரணத்தில் நெற்செய்கை செய்யப்படுகின்றது இந் நெற்செய்கைக்கு 150000 புசல் விதை நெல் வருடாந்தம் தேவைப்படுகின்றது இவற்றுள் சராசரியாக 15 வீதமான விதை நெல்லையே விவசாயத் திணைக்களம் வழங்கக்கூடிய தாகவுள்ளது. ஏனைய 85 வீதமான விதைநெல் தேவையில் 40 வீதமான விதைநெல்லை தனியார் விதை விற்பனை நிறுவனங்கள் வழங்குகின்றபோதிலும் மொத்தமான விதைநெல் தேவையில் 45 வீதமான விதைநெல்லை விவசாயிகள் தாம் அறுவடை செய்யும் சுய விதைநெல்லிலிருந்தே பயன்படுத்துகின்றனர். இவ்வாறான சுய விதை நெல்லை விதைநெல்லாக பயன்படுத்தும்போது அவ் விதை நெல்லானது தூய விதை நெல்லாக காணப்படாது மாறாக அவ் விதைநெல்லினுள் ஏனைய நெல் இனங்கள், களைவிதைகள், முற்றாகநிரம்பல் அடையாததும் முதிர்ச்சியடையாததுமான விதைநெல், பயிர் மீதிகள், ஏனைய பொருட்கள் என்பன கலந்து காணப்படுவதனால் இவ் விதைநெல்லை நெற் செய்கைக்காக பயன்படுத்தும்போது நெற்செய்கையில் பயிர்களின் சீரானபரம்பல் காணப்படாததுடன் அதிகளவு களைகளின் தாக்கத்தையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குளை விதைகள் முளைத்து நெற்பயிருடன் சூரிய ஒளி, நீர்மற்றும் போசணைக்காக போட்டியிட்டு வளர்வதால் நெற் செய்கையிலிருந்து எதிர்பார்த்த அளவு விளைச்சலைப் பெற முடியாதுள்ளது. விதைநெல் சுத்திகரிக்கப்படும்போது களைவிதைகள் பூரணமாக அகற்றப்படுவதனால் களைகளின் தாக்கத்தை பெருமளவில் குறைக்கக்கூடியதாக விருக்கும். எனவே தூய விதை நெல்லை பயன்படுத்தி நெற் செய்கையை மேற்கொள்ளும் போதுதான் எதிர்பார்க்கும் விளைவைப் பெறக்கூடியதாக இருக்கும். இதன் மூலம் களைக்கட்டுப்பாட்டிற்கான செவீனத்தை விவசாயிகள் பெருமளவில் குறைக்கக்கூடியதாக விருக்கும்.
மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சிநிலையத்தில் விதை நெல் சுத்திகரிக்கும் நிலையமானது கடந்த 2018ம் ஆண்டில் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விதைநெல் சுத்திகரிப்பு சேவையை வழங்கிக்கொண்டு வருகின்றது. மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் அமையப்பெற்றுள்ள விதைநெல் சுத்திகரிப்பு நிலையத்தால் வினைத்திறனான முறையில் விதைநெல் சுத்திகரிப்பு சேவை வழங்கப்படுகின்ற நிலையில் அதி உச்ச அளவான சுத்திகரிப்பு சேவையாக நாள் ஒன்றிற்கு 180 புசல் விதை நெல் சுத்திகரிப்பு செய்ய முடியும். இவ் விதைநெல் சுத்திகரிப்பு நிலையமானது திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் காலை 7.30 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரையும் தனது சேவையினை வழங்கி வருகின்றது. வுpதை நெல்லை சுத்திகரிப்பதற்கு கட்டணமாக ஒரு கிலோவிற்கு ஒரு தடைவ சுத்திகரிப்பதற்காக 2 ரூபா அறவிடப்படும்.
மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் இவ் விதை நெல் சுத்திகரிப்பு நிலையம் மூலம் இவ்வாண்டின் கார்த்திகை மாதம் வரை 313,112 கிலோ விதை நெல் சுத்திகரிப்பு செய்து வழங்கப்பட்டுள்ளது. இது 15,279 புசல் விதை நெல்லாகும். மன்னார் மாவட்டத்தின் மொத்த விதைநெல் தேவையில் ஏறத்தாழ 12 வீதமான விதை நெல் தேவையை இது ஈடுசெய்துள்ளது. இவ்வாண்டு மன்னார் மாவட்டத்தில் பாரிய விதை நெல் தட்டுப்பாடு நிலவியது அத்துடன் தனியார் விற்பனை நிலையங்களில் ஒரு புசல் விதை நெல்லானது 2500 ரூபா தொடக்கம் 2600 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. வுpவசாயி தனது ஒருபுசல் விதை நெல்லை சுத்திகரித்து பயன்படுத்துவாராயின் 1500 ரூபாவை மீதமாக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வேளையில் எமது மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தால் வழங்கப்பட்ட விதை நெல் சுத்திகரிப்பு சேவையானது விவசாயிகளுக்கு பாரிய ஒரு சேவையாகவும் தேவையாகவும் அமைந்துள்ளது இதன் மூலம் விவசாயிகள் விதை நெல்லுக்கான செலவை குறைத்து அதன் மூலம் நெல் உற்பத்திச் செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கக்கூடியதாக உள்ளது.
சுத்திகரிக்கமுன்
சுத்திகரித்தபின்
சுத்திகரிப்பு செய்யப்படாத விதை நெல்லை பாவித்து செய்கை செய்யப்பட்ட வயல் துண்டம்
சுத்திகரிப்பு செய்யப்பட்ட விதை நெல்லை பாவித்து செய்கை செய்யப்பட்ட வயல் துண்டம்
இச்சேவையினைப் பெற்றுக்கொள்வதற்கு மன்னார் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளமுடியும். தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் 0232222155.