‘விடியல்’ நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

குறுகிய காலத்துக்குள் செல்வந்தராகவேண்டும் என்பதற்காக உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் சமூகம் தொடர்பில் சிந்திப்பதில்லை. அதேநேரம், உயிர்கொல்லி போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களையும் அச்சுறுத்தியிருக்கின்றனர். இந்த அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து சமூகம் எப்படியாவது போகட்டும் என்று ஒதுங்கியிருக்க முடியாது. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

யாழ். மாவட்டச் செயலகமும் மாற்றம் அறக்கட்டளையும் இணைந்து, அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்கள் எழுதிய 'விடியல்' நூலின் வெளியீட்டு விழா யாழ். மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை மாலை (23.10.2025) மாற்றம் அறக்கட்டளையின் இயக்குனர் பே.பெனிக்னஸ் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர், நான் யாழ். மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்ற காலத்தில்தான் நூலாசிரியர் அருட்கலாநிதி டேவிட் வின்சன் பற்றிக் அவர்களும் மன்னாரிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தார். அவர் எமது சமூகம் பற்றிய கரிசனையோடு இருந்தார்.

அப்போது சுமார் 20 இளம் தாய்மார் தங்கள் கைக்குழந்தைகளுடன் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். தங்களது கணவன்மாரை உயிர்கொல்லி போதைப் பாவனையிலிருந்து மீட்டெடுத்துத்தாருங்கள் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்துக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கு இடமில்லை என்ற பதில் வந்தது. இது தொடர்பில் அருட்கலாநிதி வின்சன் பற்றிக் அவர்களுடன் நான் கலந்துரையாடினேன்.

நாங்களே இங்கு புனர்வாழ்வு நிலையத்தை ஆரம்பித்து செயற்படுத்துவோம் என்று சொன்னார். அவரது முயற்சியில் புனர்வாழ்வு நிலையம் இங்கு ஆரம்பமானது. அங்கு வருபவர்களின் 50 சதவீதமானோர் திருந்தி விடுகின்றனர் என்றும் எஞ்சிய 50 சதவீதத்தினர் திரும்பவும் வருவதாக அவர் எனக்குச் சொல்வார்.

மறுவாழ்வு செயற்பாட்டை அவர் தீவிரமாக முன்னெடுத்திருந்த காலத்தில் ஓர் நாள் அவரை மணியந்தோட்டத்துக்கு முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்றிருக்கின்றார்கள். அங்கு வைத்து அவர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டது. கடவுள் செயலால் அவர் அப்போது காப்பாற்றப்பட்டார். அதேநேரம், அவர் நடத்திய புனர்வாழ்வு நிலையத்தின் மீதும் இரவு வேளைகளில் கல்வீச்சு நடத்தப்பட்டிருந்தது. ஆனாலும் அவர் தனது முயற்சிகளை கைவிடவில்லை.

உயிர்கொல்லி போதைப்பொருள் விற்பனை தொடர்பான தகவல்களை நீங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு வழங்க வேண்டாம். நேரடியாக எனக்கு வழங்குங்கள் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், அன்றைய நாளில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு முன்னால் குறிப்பிட்டிருந்தார். அந்தளவு தூரத்துக்கு இந்த உயிர்கொல்லி போதைப்பொருளுடன் தொடர்புடைய வலைப்பின்னல் இருக்கின்றது.

இவற்றுக்குப் பயந்தால் எமது சமூகத்தை காப்பாற்ற முடியாது. அருட்கலாநிதி வின்சன் பற்றிக் அவர்கள் தனது இந்த வயதிலும் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரமாக எடுத்து வருகின்றார். நாங்கள் எல்லோரும் அவருக்கு ஆதரவாக இருப்போம், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில், யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் சிறப்பு விருந்தினராகவும், வளர்பிறை நிறுவனத்தின் இயக்குனர் அருட்பணி சூசை டேமியன் அமதி அடிகளார் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்ததுடன், யாழ். தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பா.தனபாலன் மதிப்பீட்டுரையையும் நடத்தினார்.