வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவது தொடர்பான கலந்துரையாடல்

வவுனியாவில் கட்டப்பட்டு மூடப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள இயக்குவதென்று வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவுத்துறை கௌரவ பிரதி அமைச்சரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான உபாலி சமரசிங்க ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டச் செயலகத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (28.06.2025) அன்று விசேட கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், வவுனியா மாவட்டச் செயலர் சரத் சந்திர, வவுனியா மாநகர சபை மேயர் சு.காண்டீபன், வவுனியா மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

2018ஆம் ஆண்டி கட்டி முடிக்கப்பட்டு இன்னமும் திறக்கப்படாதுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை திறப்பது தொடர்பில் இதில் பிரதானமாக ஆராயப்பட்டது. வவுனியா நகரில் மொத்த மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடும் 37 வியாபாரிகளை முதல் கட்டமாக பொருளாதார மத்திய நிலையத்தினுள் வியாபாரத்துக்கு அனுமதி தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பொருளாதார மத்திய நிலையத்தை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

மேலும் வவுனியாவில் குளங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து காணிகளை கையகப்படுத்தியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆளுநருக்குச் சுட்டிக்காட்டினார். வவுனியா நகரினுள் அமைந்துள்ள சட்டவிரோத கடைத்தொகுதிகள் தொடர்பிலும் கலந்துரையாடலில் ஆராயப்பட்டு அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டது.