வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்ட வயல் விழா நிகழ்வு

வவுனியா மாவட்டத்தில் கடந்த வருடம் 100 பயனாளிகளை உள்ளடக்கியதாக வர்த்தக ரீதியிலான வீட்டுத்தோட்டமானது 5 கிராமங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதற்கென பயனாளி ஒருவருக்கு 100 பொலித்தீன் பைகளும், தாங்கியுடன் கூடிய சிறிய அளவிலான சொட்டு நீர்ப்பாசனத் தொகுதியும் காலநிலைக்குத் தாக்குப்பிடிக்கக்கூடிய ஒருங்கிணைந்த நீர் முகாமைத்துவத் திட்டத்தினூடாக (CRIWM) உள்ளீடுகளாக வழங்கப்பட்டிருந்தன. தற்போது அறுவடை நடைபெற்று வருகின்றது. இந் நிலையில் வயல் விழா நிகழ்வானது கலசியம்பலாவ கிராமத்தில் 08.02.2024 அன்று பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் பொ. அற்புதச்சந்திரன் அவர்களின் தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்டச் செயலாளரும், உயர் திரு. P.A. சரத்சந்திர அவர்களும், கௌரவ விருந்தினர்களாக மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் திரு. மரியதாசன் ஜெகூ, மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் உதவிச் செயலாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், விவசாயப் போதனாசிரியர்கள், விவசாயிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில் காய்கறிகளின் விலைகள் உயர்வாகவுள்ள தற்போதைய காலங்களில் இம் மாதிரியான வீட்டுத்தோட்டச் செய்கையின் மூலமாக மக்கள் தமக்குத் தேவையான காய்கறிகளை பெற்றுக்கொள்வதுடன்; நஞ்சற்ற காய்கறிகளையும் உட்கொள்ளக் கூடியதாகவும் இருக்கும் என கூறினார்.