வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மற்றும் இந்து கலாசார திணைக்களம் ஆகியன ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவ சபையுடன் ஒன்றிணைந்து நடத்திய வடமாகாண மஹா சிவராத்திரி விழா 2022.03.01 (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் 7.00மணிக்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் கல்வி அமைச்சின் செயலாளர் திருவாளர் இ.வரதீஸ்வரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவானது வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் முதல் தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டமை சிறப்பான ஒரு விடயமாகும்.
இவ்விழாவின் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. ஜீவன் தியாகராஜா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண பிரதம செயலாளர் திருவாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன அவர்களும், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருவாளர் கே.விமலநாதன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி ப.ஜெயராணி அவர்கள் கௌரவ விருந்தினராகவும், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முகாமைத்துவசபைத் தலைவர் திரு.சி.கணேசபிள்ளை அவர்கள் இனிய நல்விருந்தினராகவும் கலந்து விழாவினை சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர், உதவி செயலாளர் மற்றும் பிரதம கணக்காளரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரும், முல்லைத்தீவு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளரும் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.
ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து விருந்தினர்கள் நிகழ்வு மேடைக்கு அழைத்து வரப்பட்டனர். வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்கள் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றலுடன் இனிதே ஆரம்பமானது. ஜெகன் ஜெனார்த்தனன் அவர்களின் வரவேற்பு நடனத்தைத் தொடர்ந்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் தலைமையுரையும், வடமாகாண பிரதம செயலாளர் அவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் அவர்களினால் சிறப்பு விருந்தினர் உரைகளும், முகாமைத்துவ சபை தலைவர் அவர்களால் இனிய நல்விருந்தினர் உரையும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ச்சியாக ஆதிகணபதி அறநெறிப்பாடசாலை, கற்பகா அறநெறிப்பாடசாலை, பரத நர்த்தனாலயா நடன கலையகம்(வவுனியா) மற்றும் முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி ஆகியவற்றின் மாணவர்களது பல்வேறு வகையான நடன நிகழ்வுகள் விழாவினை மேலும் மெருகூட்டின. யாழ் பல்கலைக்கழக மாணவன் திரு.வி.விஸ்ணுஜன் அவர்களின் ஆன்மீகச் சொற்பொழிவுடன் முல்லைக் கவிஞர்களின் கவியரங்கமும் விழாவினை சிறப்பித்தன. ஆலய முகாமைத்துவ சபையினரால் சிறப்பு விருந்தினர்கள் நினைவுப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கலைநிகழ்வுகளில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு. ஜீவன் தியாகராஜா அவர்கள் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய லிங்கோற்பவ தரிசனத்தில் கலந்து சிறப்பித்ததோடு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்களுக்குத் தெரிவித்திருந்தார். ஆலய முகாமைத்துவ சபையினரால் நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டனர். ஓட்டுசுட்டான் மகா வித்தியாலய பழைய மாணவரும் தற்போது லண்டனில் வசிப்பவருமான திரு. தர்மலிங்கம் சிவனழகனின் அனுசரனையுடன் நிகழ்வின் இறுதி அங்கமான எஸ்.ஜி.சாந்தன் இசைக்குழுவினரின் ஆன்மீக இசைச் சங்கமம் மிகவும் சிறப்பாக அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தது. பெருந்திரளான மக்களின் பங்குபற்றலுடன் வடமாகாண மஹா சிவராத்திரி விழா இனிதே நிறைவடைந்தது.