வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

யாழ் சண்டிலிப்பாயை பிறப்பிடமாக கொண்ட அமரர் வேலாயுதன் சிவஞானசோதி அவர்களது பிரிவுத்துயர் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம். இவரது இழப்பு எமது சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னார் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதார துறையில் சிறப்பு இளமணி பட்டத்தையும் ஐக்கிய இராச்சியத்தின் பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் கருத்திட்ட திட்டமிடலிலும் மேற்பார்வையிலுமான விஞ்ஞான முதுமாணிப்பட்டத்தையும் பெற்றிருந்ததுடன் இலங்கை பட்டய கணக்காளர்களுக்கான பட்டய நிறுவனத்தின் உறுப்புரிமையையுடன் கொண்டிருந்தார்.
மேலும் இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அமைச்சுக்களில் செயலாளராக பதவி வகித்துள்ளார். அவற்றுள் வடக்கு மீள்குடியமர்வு புனர்நிர்மாணம் அபிவிருத்தி மற்றும் இந்நு சமய விவகார அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய விவகார அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் மீள் இணக்க அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு புனரமைப்பு இந்து சமய விவகார அமைச்சு, தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, பாரம்பரிய கைத்தொழில், சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு ஆகியன குறிப்பிடத்தக்கனவாகும்.
அன்னார் 30 ஆண்டுகளுக்கு மேலாக அபிவிருத்தி திட்டமிடல், முகாமைத்துவம், தேசிய மட்டத்திலான மேற்பார்வை மற்றும் மதிப்பீடு முதலிய துறைகளில் சிரேஸ்ட மட்ட பொதுத்துறை அனுபவத்தை கொண்டவர் ஆவார். அவர் அரச மதிப்பாய்வுகளிலும் தலைமைத்துவம் வழங்கினார். பொருளாதார ஒருங்கிணைப்பு அபிவிருத்தி நிறுவனத்தின் அபிவிருத்தி உதவிக்குழு மதிப்பீட்டு வலையமைப்பில் மேற்கொள்ளப்பட்ட நிதிபயன்ப்பாட்டு வினைத்திறன் தொடர்பான பாரிஸ் பிரகடனத்தை நடைமுறைப்படுதுவதிலும் மதிப்பாய்விலும் இணைத்தலைமை வகித்தார்.
அவர் இறுதியாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரம் மீள்குடியேற்றம் புனர்நிர்மாணம், வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராகவும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளதுடன் தற்போது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்பட்டு சிறப்பாக கடமையாற்றி வந்துள்ளார்.
அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்வதுடன் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

ஆளுநர்,
வட மாகாணம்.