வட மாகாண கௌரவ ஆளுநரின் இரங்கல் செய்தி

மன்னார் மாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு ஆண்டகை அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்தேன்.
நல்லதொரு ஆன்மீகத் தலைவரை வட பகுதி இன்று இழந்து நிற்கின்றது. இன, மத, குல பேதங்களை கடந்த இவரின் இழப்பு வடபுல மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு அடிகளாரின் மறைவினையொட்டி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் அமைதியடைய பிரார்த்திக்கின்றோம்.
யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவைப் பிறப்பிடமாக கொண்ட இவர் 1967இல் குருவானவராக தனது பணியை ஆரம்பித்து, 1984 இல் றோமில் உள்ள பரப்புரைக் கல்லூரியில் திருமறை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின் 1992 புரட்டாதி மாதம் மன்னார் கத்தோலிக்க மறை மாவட்டத்தின் ஆயராக திருநிலைப் படுத்தப்பட்டு கத்தோலிக்க மக்களின் நல்லாயனாய் திகழ்ந்தார். அனைத்து மக்களுக்கும் உள புற தேவைகளை நிறைவேற்றுவதில் அவர் ஆற்றிய பணி அளவிடற்கரியது.
வணக்கத்திற்குரிய ஆண்டகை அவர்கள் 2015 நடுப்பகுதியில் சுகயீனமுற்ற காரணத்தால் தனது ஆயர் பதவியை துறந்தார். தனது சொல்லற்கரிய சேவைகளால் மக்கள் மனதில் நிறைந்து, இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவு கூறும் பரிசுத்த வாரத்தில் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்ற அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப்பு அடிகளாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றேன்.

ஆளுநர்,
வட மாகாணம்.