முல்லைத்தீவு மாவட்டத்தின் மிக முக்கியமான பாலமான வட்டுவாகல் பாலம் இரண்டு ஆண்டுகளில் அபிவிருத்தி செய்யப்படும் என மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்கள் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாக இருந்து வந்த வட்டுவாகல் பாலத்தின் அபிவிருத்தி செய்யும் ஆரம்ப நிகழ்வு வட்டுவாகலில் இன்று செவ்வாய்க்கிழமை (02.09.2025) நடைபெற்றது.
140 கோடி ரூபா செலவில் இந்தப் பாலம் அமைக்கப்படவுள்ளது. இரு வழிப் பாதையாகச் செல்லும் வகையில் அமைக்கப்படவுள்ள இந்தப் பாலத்தின் அபிவிருத்திப் பணிகள் நாளையிலிருந்து ஆரம்பமாகும் என போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் கௌரவ அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களால் புனரமைப்புக்கான பெயர்ப் பலகை திரை நீக்கம் செய்து வைக்கப்பட்ட பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.திலகநாதன், கௌரவ அமைச்சர்களான இ.சந்திரசேகர் மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ம.ஜெகதீஸ்வரன், து.ரவிகரன் ஆகியோரும், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.