வடமாணத்திற்கான கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வு கலந்துரையாடல்

கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் 01 டிசெம்பர் 2020 அன்று காலை 10.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர்,யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், துறைசார் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இவ் அமர்வில் பல முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. குறிப்பாக கொவிட் 19 தொற்றின் தற்போதைய நிலை பற்றி மாகாண சுகாதார சேவை பணிப்பாளரிடம் வினவியதைத் தொடர்ந்து ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது எமது மாகாணத்தில் மிகக் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர். எனவே தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும் காலம் வரை மக்கள் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி சுற்றியுள்ளவர்களையும். சமூகத்தையும் பாதுகாக்க அக்கறையுடன் செயற்பட வேண்டுமென கௌரவ ஆளுநர் அவர்கள் தெரிவித்தார்.

மேலும் அனைத்து கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் வீதி திருத்தப் பணியாளர்களும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டி சுற்று நிருபத்தினை பின்பற்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் இவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அறிவுறுத்தல் மேற்பார்வை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர், மாவட்டச் செயலாளர்கள்ஈ மற்றும் பொலிஸ் தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து கூறுகையில் வெளி மாகாணங்களிலிருந்து வருபவர்களாலேயே எமது மாகாணத்திற்கு கொவிற் தொற்று அதிகரிப்பதால் வெளி மாகாணத்திற்கு சென்று வரும் பயணிகள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்களும் தமது விபரங்களை வவுனியா சோதனைச் சாவடி மற்றும் உரிய மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வழங்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

மேலும் சட்டரீதியற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை அதிகாரியிடம் ஆளுநர் பணித்தார். தொடர்ந்து மாகாணத்தில் நடைபெறும் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கிராமிய விழிப்புணர்வுக் குழுக்களை விழிப்பாக செயற்பட்டு காவற்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது நடைபெறும் சட்டரீதியற்ற செயற்பாடுகளின் உண்மை நிலை, அதற்கான காரணங்களை தமிழ் மொழியில் ஊடக அறிவித்தலாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமெனவும் பொலிஸ் அதிகாரிக்கு பணிக்கப்பட்டது.

மேலும் அண்மைக்காலமாக தற்கொலை இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அவை தொடர்பில் கருத்துரைத்த கௌரவ ஆளுநர் அவர்கள் இவ் தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் மற்றும் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ள யாழ் வைத்தியசாலை பணிப்பாளருக்கு தெரிவித்ததுடன் இதற்காக தற்போது 24 மணித்தியால உதவி தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அத்தோடு மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாது ஏனைய பொழுது போக்கு முறைகளை பயன்படுத்தி மன அழுத்தங்களிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டுமெனவும் இதற்காக பொது இடங்களில் குடும்த்தினருடன் இருக்கக் கூடிய பூங்காக்கள் மற்றும் பொது விளையாட்டு வசதிகளை உருவாக்கி கொடுத்து மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கவும் கௌரவ ஆளுநர் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவசாயத்துறை அமைச்சர் கௌரவ மகிந்தானந்த அலுத்கமகே அவர்கள் 500 மிளகாய் பயிர்ச் செய்கையாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கான உதவிகளை வழங்கவுள்ளதால் அதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லுமாறு வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு கௌரவ ஆளுநர் அவர்களால் பணிக்கப்பட்டது.