ஒரு சமூகத்தின் அலங்காரத்தை காணும் இடம்தான் திறந்த வெளி. திறந்த வெளியை காணும் முக்கிய இடமாக இப்போது சாலையும் வீதியும் காணப்படுகின்றது என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
ஆளுநர் அவர்களின் வழிநடத்தலில் ஆளுநர் செயலகம், வீதி பாதுகாப்பு சபை மற்றும் வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபை ஆகியன இணைந்து நடாத்தும் இவ்வீதிபாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு வீதி பாதுகாப்பு சபையின் பிரதானி தலைமையில் 11 ஒக்ரோபர் 2019 அன்று காலை 9.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் செயலகத்திலிருந்து ஆரம்பமான நடைபவனி துரையப்பா விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே கௌரவ ஆளுநர் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் இந்த நடைபவனி நிகழ்வானது இன்று காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர்கள் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நிகழ்வில் ஆளுநர் அவர்கள் குறிப்பிடுகையில், எங்கள் வீதிகள் பாதுகாக்கப்படவேண்டும் அவ்வீதியில் செல்லும் நம் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் . அதன் அடிப்படையில் நம் நாகரீகம் பாதுகாக்கப்படவேண்டும். ஒரு சமூகத்தின் அலங்காரத்தை காணும் இடம்தான் திறந்த வெளி. திறந்த வெளியை காணும் முக்கிய இடமாக இப்போது சாலையும் வீதியும் காணப்படுகின்றது. இங்கே முச்சந்தி மற்றும் நாற்சந்திகளில் வீதிவிபத்துக்கள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றது. அத்துடன் கட்டாக்காலி மாடுகள் மற்றும் தெருநாய்கள் என்பவற்றினால் ஏற்படும் விபத்துக்களை தவிப்பதற்கான வழி எது வென பதில்காணவேண்டும் என்று ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், நாம் விழுந்திருந்தாலும் விழுத்தப்பட்டிருந்தாலும் விளிம்பிலே வாழ்ந்துகொண்டிருந்தாலும் நாங்கள் கட்டியெழுப்பும் நாகரீகம் ஓரு ஆழமான நாகரீகமாக இருக்கவேண்டும் என்பதற்கு இதுவே அத்தாட்சி. என்று ஆளுநர் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.
இந்த நடைபவனி நிகழ்வில் ஏராளமான பாடசாலை மாணவர்கள் , பல்கலைக்கழக மாணவர்கள் , தாதியர் பயிற்சிக்கல்லூரி மாணவர்கள் , வடமாகாண போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் , வீதி அபிவிருத்தி திணைக்களத்தலைவர் , மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் , வடமாகாண சபையின் பிரதம செயலாளர் , அரச திணைக்களத்தலைவர்கள் அதிகாரிகள் மற்றும் வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
வடக்கு ஆளுநரின் ஊடகப்பிரிவு