வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024

வடமாகாணத்தின் முல்லைத்தீவு,, வவுனியா, கிளிநெச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் அவர்களுக்கான சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்கும் முகமாகவும் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை வளாகத்தில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் ஒழுங்குசெய்யப்பட்ட வடமாகாண வர்த்தகச் சந்தை – 2024 ஆம் ஆண்டுக்கான நிகழ்வானது தொழிற்துறைத் திணைக்கள மாகாணப்பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் அவர்களின் தலைமையின் கீழ் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

வடமாகாண தொழிற்துறை வர்த்தகச் சந்தையினை முல்லைத்தீவு மாவட்ட மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நாடாவை வெட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம்) சி.குணபாலன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவி செயலாளர் ளு.இராஜமல்லிகை, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம. உமாமகள், தொழிற்துறைத் திணைக்கள உதவிப்பணிப்பாளர் திருமதி க.துசியா, புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கணக்காளர், புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளர், தொழிற்துறைத் திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச நிர்வாக கிராம அலுவலர், தொழிற்துறைத் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட அலுவலர் மற்றும் தொழிற்துறைத் திணைக்கள வவுனியா, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்ட அலுவலர்கள், தொழிற்துறைத் திணைக்கள உத்தியோகத்தர்கள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

வர்த்தகச் சந்தை நிகழ்வில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 48 தொழில் முயற்சியாளர்கள் வருகை தந்திருந்தனர். இவ்வர்த்தகச் சந்தையானது காலை 9.30 மணி தொடக்கம் மாலை 7.00 மணி வரை இரண்டு நாட்களாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் 30 விற்பனைக்கூடங்கள் அமைக்கப்பட்டு நெசவு உற்பத்திகள், பன்னக் கைத்தொழில், தோற்பொருட்கள் அலங்காரப்பொருட்கள், இனிப்புப்பண்டங்கள், உணவுப் பொருட்கள், கடல்சார் உணவுப் பொருட்கள், பால்சார் உற்பத்திப் பொருட்கள், பழ மரக்கன்றுகள், குளிர்பான உற்பத்திகள், பற்றிக் உற்பத்திகள் என பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வர்த்தகச் சந்தை மூலம் மொத்த விற்பனை வருமானம் ரூபா 881,480.00 பெறப்பட்டது.

தொழிற்துறை வர்த்தகச் சந்தை – 2024 இன் மூலம் சந்தை வாய்ப்பு, வர்த்தகத் தொடர்பு, கொள்வனவாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு இடையிலான சந்திப்பு, புதிய உள்ளுர் உற்பத்திப் பொருட்களின் அறிமுகம், சந்தைக்கு அதிகளவு அறிமுகப்படுத்தப்படவேண்டிய உற்பத்திப் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பற்றிய விபரம் போன்றன தொழில் முயற்சியாளர்கள் பெற்று மிகவும் பயனடைந்ததுடன் உற்பத்தியாளர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கிடையில் சிறந்த தொடர்பாடலினை பேணமுடிந்தமையும் சிறப்பானதாகக் காணப்பட்டது.