வடமாகாண துறைசார் செயலாளர்கள் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களுடனான கலந்துரையாடல்

வடமாகாண கௌரவ ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண துறைசார் செயலாளர்கள் மற்றும் பிரதி பிரதம செயலாளர்களுடனான கலந்துரையாடல் 10 யூன் 2021 அன்று காலை 11 மணியளவில் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் நிதி, நிர்வாக, நிறுவன மற்றும் ஆளணி பயற்சி தொடர்பான தற்போதைய துறைசார் செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், உதவிச் செயலாளர், கல்வி, சுகாதாரம், விவசாயம், மகளிர் விவகாரம், உள்ளூராட்சித் திணைக்கள செயலாளர்கள், கணக்காளர்கள், உள்ளக கணக்காய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

கலந்துரையாடலில் கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி சபைகள் மற்றும் மகளிர் விவகார மாகாண அமைச்சின் செயலாளர்களுடன் துறைசார் செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்த கௌரவ ஆளுநர் அவர்கள் தனிப்பட்ட கட்டட நிர்மாண ஒப்பந்தகாரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நிர்மாண நடவடிக்கைகளை சிறப்பாக நிறைவேற்றுகிறார்களெனில் அரச துறைசார் ஒப்பந்தக்காரர்கள் குறிப்பிட்ட காலப்பகுதியில் வேலைத்திட்டங்களை முடிக்காது தாமதப்படுத்துவது ஏன் என வினவியதுடன், ஒரு மாத காலப்பகுதிக்குள் செயற்பாடுகளின் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்காது விடின், குறித்த நிதி ஒதுக்கீட்டிணை ஏனைய திட்டங்களுக்கு மாற்றீடு செய்ய உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், கொவிட்-19 தொற்றிடர் காலத்தில் கட்டட ஒப்பந்த ஊழியர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் குறித்த வேலைத்தளத்தில் தங்கி நின்று செயற்பாடுகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தக்காரர்கள் மூலப் பொருட்களை சரியான நேரத்தில் வழங்கவும் நடவடிக்கை எடுக்க கௌரவ ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், zoom தொழில்நுட்பம் மூலம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விச் செயற்பாடுகளில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.