வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண ஆடிப்பிறப்பு விழாவானது 2023.07.17 (திங்கட்கிழமை) காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி அமைச்சின் சரஸ்வதி சிலை முன்றலில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாணப் பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் (தலைவர், சிவபூமி அறக்கட்டளை, தெல்லிப்பளை துர்க்கா தேவி) அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், உதவிச் செயலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் மாகாண கல்வித் திணைக்களப் பணிப்பாளர், யாழ் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக விருந்தினர்கள் நிகழ்வு மேடைக்கு அழைத்து வரப்பட்டு மங்கல விளக்கேற்றலுடன் தேவாரம் இசைக்கப்பட்டு நிகழ்வு இனிதே ஆரம்பமானது. வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் திருமதி. லாகினி நிருபராஷ் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களால் வரவேற்பு நடனம் நிகழ்த்தப்பட்டது. பின்பு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களால் தலைமையுரை இடம் பெற்றதுடன் யாழ் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களால் ஆடிப்பிறப்பு பாடலும் சிறப்பாக இசைக்கப்பட்டது. தொடர்ச்சியாக சிறப்பு விருந்தினரின் சிறப்புரையானது ஆடிப்பிறப்பின் மகத்துவம் மற்றும் அதன் சிறப்பினை உணர்த்தி இடம் பெற்றது.
அடுத்த நிகழ்வாக இந்து ஆரம்பப் பாடசாலை மாணவர்களால் கிராமிய நடனம் சிறப்பாக வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வடமாகாண பிரதம செயலாளர் திரு.சமன் பந்துலசேன அவர்களால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. பின்பு நிகழ்வில் பங்கு கொண்டு சிறப்புற கலை நிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஆடிப்பிறப்பு விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் ஆடிக்கூழ், கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டன. இந்நிகழ்வினை கலாசார உத்தியோகத்தர் திரு.ம.அருட்சந்திரன் அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார். இறுதியாக பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.ர.பத்மராணி அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வானது இனிதே நிறைவுபெற்றது.