வடமாகாணத்தில் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான தகவல் சேகரிப்பும் ஆய்வும்

வடமாகாணத்தில் விவசாயத்துறை தொடர்பான தகவல்களை சேகரிப்பதற்காகவும் ஆய்வினை மேற்கொள்ளும் பொருட்டு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினரான கசோக் சிராய் (சந்தை நோக்கிய விவசாய நடவடிக்கைகளுக்கான பொறுப்பதிகாரி) மற்றும் JICA நிறுவனத்தின் சிரேஸ்ட ஒருங்கிணைப்பாளர் கலாநிதி.ஏ.செனவிரட்ன ஆகியோர் 08.03.2019 ஆம் திகதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து மாகாண விவசாயப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினருடன் ஏறத்தாழ 03 மணித்தியாலங்கள் கலந்துரையாடி தேவையான விவசாயம்சார் தகவல்களைப் பெற்றுக் கொண்டார்கள்.

இக் கலந்துரையாடலில் மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.சி.சிவகுமார், யாழ்ப்பாணம் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திருமதி.அஞ்சனாதேவி சிறீரங்கன், விவசாயக் கண்காணிப்பு உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயப் போதனாசிரியர்கள்  ஆகியோர் பங்குபற்றியிருந்தார்கள்.

இக் கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கசோக் சிராய் அவர்கள் இலங்கையில் விவசாயத் துறை தொடர்பான தகவல் சேகரிப்பதற்கான ஆரம்பத்திரட்டினைப் பங்குபற்றுநர்களிற்கு கையளித்தார். மேலும் பூங்கனியியலில் சிறிய உற்பத்தியாளர்களை வலுவூட்டலும் மற்றும் மேம்படுத்தலுக்குமான அணுகுமுறை சம்பந்தமான சுருக்கமான வெளிப்படுத்துகையினை பங்குபற்றுநர்களிற்கு கையளித்தார். கென்யாவின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பின்பற்றப்படும் இவ் அணுகுமுறை சம்மந்தமாக விரிவான முறையில் விளக்கமளித்தார்

இக் கலந்துரையாடலின் போது கீழ்வரும் ஆவணங்கள் தரவுகளைப் பெறும் பொருட்டு கசோக் சிராய் அவர்களிடம் கையளிக்கப்பட்டன

1) மாகாண விவசாயத் திணைக்களத்தின் அமைப்பு விளக்கப்படம்
2) மாகாண விவசாயத் திணைக்களத்தின் அனுமதிக்கப்பட்ட மற்றும்
தற்போதுள்ள ஆளணி விபரங்கள்
3) மாகாண விவசாயத் திணைக்களத்தின் 2018 ஆம் ஆண்டிற்குரிய
4) செயற்பாட்டறிக்கை
5) வடமாகாணத்திற்கான விவசாயக் கொள்கையின் இறுதி வரைபு
6) இலங்கைக்கான விவசாயக் கொள்கையின் இறுதி வரைபு

இவ்விடயம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டமும், வடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டமும், வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரம் மாவட்டமும் ஏன் தெரிவு செய்யப்பட்டது என்பது தொடர்பாக கசோக் சிராய் அவர்கள் விளக்கமளித்தார்.

கள ஆய்வுகளை மேற்கொள்ளும் JICA குழுவினருக்கு 09.03.2019 மற்றும் 11.03.2019 ஆம் திகதிகளில் விவசாயிகள், விவசாயப் பெண்கள் மற்றும் விவசாய தொழில்முயற்சியாளர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்குரிய ஒழுங்குகளை கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் திரு.பொ.அற்புதச்சந்திரன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.

கள ஆய்வுகளை மேற்கொள்ளும் JICA குழுவினர் கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மற்றும் பசுமைப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள் ஆகியோரை 09.03.2019 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) ஆராய்ச்சிக் குழுவின் உறுப்பினர்கள் 11.03.2019 ஆம் திகதி வட்டக்கச்சியிலுள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தர்களுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். மற்றும் பயிற்சி நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பயிர்ச்செய்கைத் துண்டங்களையும் பார்வையிட்டார்கள் இதனைத் தொடர்ந்து உருத்திரபுரம் இளம் விவசாயிகள் கழக உறுப்பினர்கள், விவசாயப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயப் பெண்கள் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடி தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டார்கள். இத்துடன் சிவனருள் விவசாய உற்பத்திகள் தயாரிப்பு நிலையத்தின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்கள்.

மேலதிக விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு இவ்வருடத்தின் ஏப்பில் மாத்தின் இறுதிப்பகுதியில் அல்லது மே மாதத்தின் முற்பகுதியில் மீண்டும் தமது குழுவினர் இலங்கைக்கு வரவுள்ளதாக கசோக் சிராய் அவர்கள் தெரிவித்திருந்தார்.