வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களிலிருந்து நாளாந்தம் சேகரிக்கப்படும் 14,000 லீற்றர் பசுப்பால் ஏனைய மாகாணங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுவரும் நிலையில், வடக்கில் பால் தொடர்பான உற்பத்திப்பொருட்களுக்கு பசுப்பாலை பயன்படுத்தும் வேலைத்திட்டத்தை வடமாகாண ஆளுநர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் யாழ், இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் உட்பட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வடக்கில் விவசாயம், கால்நடை வளர்ப்பு, கிராமியக்கைத்தொழில் தலைவர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வடமாகாணத்தில் சேகரிக்கப்படும் பாலை பாதுகாப்பதற்கும், வடக்கில் பால் தொடர்பான பொருட்களை தயாரிப்பதற்கான தொழிநுட்ப உதவிகளை வழங்குவதற்கும் தாம் முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும், இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட பணியாளர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று முறையாக பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்காலத்தில் புதிய தயாரிப்புகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சிறீ ராகேஷ் நட்ராஜ் கூறினார்.
வடமாகாணத்தில் உள்ள பெரும்பாலான மக்கள், மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து தமது அன்றாட வாழ்க்கையை மேற்கொண்டு வருவதாகவும் இந்த வாழ்க்கைமுறை மூலம் வடமாகாண மக்களின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த சந்தர்ப்பம் உள்ளதால், நாளாந்தம் கிடைக்கும் பாலிலிருந்து உற்பத்திசெய்யக்கூடிய பல்வேறு உற்பத்திகளுக்கு தேவையான அறிவை வழங்கவேண்டும் என்றும் வடமாகாண ஆளுநர் அதிகாரிகளுக்கு கூறினார்.