வடமாகணத்தில் இளையோர் மத்தியில்  காணப்படும் பிரச்சினைகளை ஆராய்வதற்கான  குழுவை நியமிக்குமாறு ஆளுநர் பணிப்புரை

வட மாகாணத்தில் இளையோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் கட்டிளம் பருவத்தினரிடையே காணப்படும் சில நடவடிக்கைகளால், சமூக மட்டத்தில் பல்வேறு சிக்கல்கள் உருவாகுவதாகவும், இவற்றை ஆராய்ந்து தீர்க்கும் பட்சத்தில், சிறந்த சமூக கட்டமைப்பை ஏற்படுத்த முடியும் என அரச அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விடயத்தை ஏற்றுக்கொண்ட வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,  இளையோர் மற்றும் கட்டிளம் பருவத்தினரின் தகாத செயற்பாடுகளால் சமூக மட்டத்தில் ஏற்படும்  பிரச்சினைகளை ஆராய்வதற்கு குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.
வட மாகாணத்திலுள்ள கல்வி, சுகாதாரம்,மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கும் இடையில், ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே, இளையோர் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய குழுவை நியமிப்பதற்கான பணிப்புரை கௌரவ ஆளுநரால் விடுக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் மாணவர்கள் இடைவிலகல் குறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், சுமார் 25 வீதமான பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு கட்டாயம் தேவைப்படுவதாகவும் கல்வித்துறைசார் அதிகாரிகள் இதன்போது கௌரவ ஆளுநரிடம் எடுத்துக்கூறினர்.
மாணவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் கவலை தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகள், விசேடமாக மாணவிகளின் சுகாதார நிலைமை, மாதவிடாய் சிக்கல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுதல், வீட்டு வன்முறைகளுக்கு ஆளாகுதல், சிறுவர் தொழிலாளர்களாக மாற்றப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கௌரவ ஆளுநரிடம் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது.
அரச அதிகாரிகளின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்த வட மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண கல்வி, சுகாதாரம், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்களின் செயலாளர்களையும், ஏனைய உயர்மட்ட அதிகாரிகளையும் இணைத்து குழுவை நியமிக்குமாறும்,  இந்த குழுவின் ஆலோசனைக்கு அமைய துறைசார் குழுக்களையும், உப குழுக்களையும் நியமித்து, சமூக மட்டத்தில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக ஆராய்ந்து, அதற்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பான பரிந்துரைகளை சமர்பிக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.