இப்போது நடைபெறும் விபத்துக்களைப் பார்க்கும்போது, பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் பயணிக்கும் ஏனையோரின் உயிரிலும் கவனமில்லை. தமது உயிரிலும் கவனமில்லை. இதை அறியாமை என்று சொல்வதா அல்லது கவனக்குறைவு என்று சொல்வதா எனத் தெரியவில்லை. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் வீதிப் பாதுகாப்புத் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை (30.07.2025) அதிகார சபையின் தலைவர் க.மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில், போர்க்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும், அங்கவீனங்களையும் விட இப்போது வீதி விபத்துக்களால் அதிகளவு இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றோம். வீதி விபத்துக்கள் தொடர்பான செய்திகள் இல்லாத நாள் ஒன்று இல்லை என்ற நிலைமையே இப்போது இருக்கின்றது. குன்றும் குழியுமாக எமது வீதிகள் இருந்தபோது இவ்வாறான விபத்துக்கள் நடக்கவில்லை. இப்போது காப்பெற் வீதியாக எல்லாம் மாறியுள்ள நிலையில் விபத்துக்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.
மனதைப் பாதிக்கின்ற – நெஞ்சை உலுக்குகின்ற எத்தனையோ விபத்துக்கள் நடக்கின்றன. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் செல்பவர்கள் வீதி விபத்துக்களில் உயிரிழப்பதால் ஏற்படும் நிலைமையை சிந்தித்துப் பார்க்கவேண்டும். அதைச் சிந்தித்தால் இந்த விபத்துக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் குறையும்.
நானே வீதியில் பயணிக்கும்போது பல வாகனச் சாரதிகளின் பொறுப்பற்றதனத்தைக் கண்டிருக்கின்றேன். எந்தவொரு சமிஞ்சையுமின்றி திடீரென வாகனத்தை குறுக்கே திருப்புவார்கள்;. சில தனியார் பேருந்து உரிமையாளர்களின் முறையற்ற சாரத்தியம் தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு நானே முறைப்பாடளித்து அவர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கச் செய்திருக்கின்றேன்.
வீதி விபத்துக்களை தணிப்பது என்பது, இன்றைய இந்த விழிப்புணர்வு செயலமர்வில் பங்கேற்கும் உங்கள் ஒவ்வொருவரது நடத்தையில்தான் தங்கியிருக்கின்றது, என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சன், மருத்துவக் கலாநிதி எஸ்.ரி.எஸ்.சந்திரகுமார் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சிறுவர் சத்திரசிகிச்சை நிபுணர் பா.சயந்தன், சட்டமருத்துவ அதிகாரி உ.மயூரதன், பிரதம வாகனப் பரிசோதகர் ஜெயசேகர, யாழ்ப்பாணம் – சிரேஷ;ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமன்னா ஆகியோர் விழிப்புணர்வு செயற்பாட்டை முன்னெடுத்தனர்.