வடக்கு மாகாணத்திலிருந்து சுதேச வைத்தியத்துறைக்குத் தேவையான மருத்துவ மூலிகைகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும். அவை எமது மாகாணத்தின் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிலையை அடைய வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சில் இன்று சனிக்கிழமை (03.01.2026) மதியம் நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் கீழுள்ள மருத்துவ அத்தியட்சகர் மற்றும் மருத்துவப் பொறுப்பதிகாரி ஆகிய நிர்வாகப் பதவிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், இத்துறையில் சிறப்பாகச் செயலாற்றிய விசேட மருத்துவர்களுக்கான மெச்சுரைகளும் ஆளுநரால் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர்:
மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இத்துறைக்கான நிதி ஒதுக்கீடுகளை அதிகரித்ததுடன், போதியளவு வைத்தியர்களையும் நியமித்துள்ளது. இதன் மூலம் எமது மாகாணத்திலிருந்த வெற்றிடங்களை நாம் முழுமைப்படுத்தியிருக்கின்றோம். சுதேச மருத்துவத்துறை இன்று வளர்ச்சியடைந்து வருகின்றது. எனவே, இத்துறையைச் சுற்றுலாத்துறையுடன் இணைப்பதன் மூலம் இதனை மேலும் விஸ்தரிக்க முடியும். பல சுற்றுலாப் பயணிகள் சுதேச மருத்துவ சிகிச்சைக்காகவே வருகை தருகின்றனர். எனவே, இவ்விரு துறைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்.
வடக்கு மாகாணத்தில் வன்னிப் பிரதேசம் மிகவும் பின்தங்கிய பகுதியாகும். அங்கு போக்குவரத்து வசதிகள் சீராக இல்லாததுடன், பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன. இவ்வாறான பிரதேசங்களில் வசிக்கும் எமது மக்களுக்குத்தான் எங்களுடைய சேவைகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன.
எனினும், நேர்முகத் தேர்வில் தெரிவு செய்யப்பட்ட சிலர், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நியமனங்கள் கிடைத்தமையால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டது எனக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது. அரச சேவையில் எவருக்கும் எந்தவொரு இடமும் நிரந்தரமானதல்ல. ‘எந்தப் பிரதேசத்திலும் சேவையாற்றுவோம்’ என உறுதியுரை எடுத்தே நாம் பணிக்கு இணைகின்றோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
எனது முதல் நியமனம் நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில்தான் கிடைத்தது. அது ஒரு போர்க்காலம். தொலைத்தொடர்பு வசதிகள் அறவே இல்லாத காலம். நான் எனது வீட்டிலிருந்து துவிச்சக்கர வண்டியில் குறிகாட்டுவான் சென்று, அங்கிருந்து படகில் சென்று பணியாற்றிய காலம் அது. அதேபோல, பல அரச பணியாளர்கள் கிளாலியால் உயிராபத்துக்கு மத்தியில் படகில் ஏறிச் சென்று பணியாற்றியிருக்கின்றார்கள். 2009ஆம் ஆண்டு வரை இவ்வாறானதொரு நெருக்கடியான சூழலில்தான் நாங்கள் எல்லோரும் பணியாற்றினோம். ஆனால், இன்று அனைத்து வசதிகளும் உள்ள நிலையில், பின்தங்கிய பிரதேசங்களுக்குச் செல்லத் தயங்குவது கவலையளிக்கின்றது.
தற்போதைய மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வடக்கு மாகாணத்தின் மீது கூடுதல் கரிசனை கொண்டுள்ளது. எமக்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கும் மேலதிகமாக நிரல் அமைச்சுக்களிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது. எனவே, இவ்வாய்ப்புகளைப் பயன்படுத்தி எமது மாகாணத்தை நாம் மேம்படுத்த வேண்டும், என்றார்.
இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, சுதேச வைத்தியத்துறைத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்திய கலாநிதி தி.சர்வானந்தன், அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், அமைச்சின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.





