எமது நாட்டின் இலவசக் கல்வியைப் பயன்படுத்தி கற்று இன்று பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் நீங்கள் அங்கும் இலவசக் கல்வியையே பெறவுள்ளீர்கள். நீங்கள் படித்து முடித்த பின்னர் உங்களுக்கு இலவசக் கல்வியை வழங்கிய இந்த நாட்டுக்கு, உங்கள் சொந்த மாவட்டங்களிலேயே சேவையாற்றவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான ஜனாதிபதி நிதியத்தின் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இன்று (26.09.2026) சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு துறையிலும் மாவட்ட ரீதியாக முதலாவது பத்து இடங்களைப் பெற்ற மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு துறையிலும் முதல் 20 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
இதன்படி, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த 115 மாணவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 91 மாணவர்கள், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 102 மாணவர்கள், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 86 மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 83 மாணவர்கள் என மொத்தம் 477 மாணவர்களுக்கு, தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் 4 கோடியே 77 இலட்சம் ரூபா பெறுமதியான உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்கள் பாரம்பரிய முறையில் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ;ட விரிவுரையாளர் விமல் சாமிநாதன் அவர்களின் சிறப்புரை இடம்பெற்றது.
வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவரும் கூட்டுறவு கௌரவ பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க, யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சருமான இ.சந்திரசேகர் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட சபாநாயகர் கௌரவ கலாநிதி ஜகத் விக்ரமரத்ன அவர்களின் உரையும் நடைபெற்றது. இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர், ஒரு நாட்டின் அபிவிருத்தியில் மனிதவளம் முக்கியமானது என்பதுடன், அந்த மனிதவளத்தை உரிய முறையில் வளர்த்தெடுத்து மேம்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
மாணவர்கள் தமது கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் போது, அதுவும் இலவசக் கல்வியாக அமையும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறு நாட்டின் வளங்களைப் பயன்படுத்திக் கல்வி கற்றுத் தங்களை முன்னேற்றிக் கொள்ளும் மாணவர்கள், தமது கல்வியை நிறைவு செய்த பின்னர் தங்களது சொந்த மாவட்டங்களிலேயே சேவையாற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் இவ்வாறான உதவிகள், அவர்களின் கல்விப் பயணத்துக்கு ஆதரவாக அமையும் என்பதுடன், திறமையான மனிதவளத்தை உருவாக்குவதற்கும் பங்களிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னரே ஜனாதிபதி நிதியத்தின் பல்வேறு உதவித்திட்டங்கள் வடக்கு மாகாணத்துக்கு பரந்தளவில் கிடைக்கத் தொடங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், கடந்த காலங்களில் கொழும்பை மையப்படுத்தி இடம்பெற்ற உதவி வழங்கும் நடைமுறைகள் தற்போது பிரதேச செயலர் பிரிவு மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டு, மக்கள் இலகுவாக உதவிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலான நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்துக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து உதவிகள் கிடைத்ததா என்பது தொடர்பில் கூட பொதுமக்களுக்கு போதிய தகவல் கிடைக்காத நிலை காணப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது வடக்கு மாகாணத்திலிருந்து ஜனாதிபதி நிதியத்தை நோக்கி அதிகளவான விண்ணப்பங்கள் வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாகத் தெரிவித்தார்.
‘கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சேவைகள் இன்று கிராமங்கள் தோறும் சென்றடைகின்றன. இதுவே ஏற்பட்டுள்ள மாற்றமாகும்; இதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்’ எனவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தமையைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், குறித்த மாணவருக்கும் அவருக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இன்று பெருமளவான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கிக் கௌரவிப்பது, ஏனைய மாணவர்களுக்கும் ஊக்கத்தையும் உந்துசக்தியையும் வழங்கும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டச் செயலர்கள், வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிளிநொச்சி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










