“வடக்கு மாகாண பொங்கல்விழா 2020” சிட்டிவேரம் கண்ணகை அம்மன் ஆலயத்திலும், வரணி கலாசார மத்தியநிலையத்திலும் 18 ஜனவரி 2020 அன்று நடைபெற்றது.
வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவின் பிரதம விருந்தினராக வடக்குமாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்குமாகாண பிரதம செயலாளர் திரு அ பத்திநாதனும், கௌரவ விருந்தினராக தென்மராட்சி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் திருமதி தேவநந்தினி பாபுவும் கலந்துகொண்டனர்.
வடக்குமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்மராட்சி பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ் விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர்.
வடக்கு மாகாணத்தில் இதுவரையான பொங்கல் விழாக்களில் முதன் முறையாக பதினொரு பானை வைத்து பதினொருவகையான பொங்கல் பொங்கி வழிபட்டமை இவ் விழாவின் சிறப்பம்சமாகும்.
வரணி கலாசார மத்திய நிலையத்தின் வரவேற்பு நடனம், கிளிநொச்சி ஜானு அரங்காற்றுகையகத்தின் அரிவி வெட்டு நடனம், மறவன்புலவு நித்தர் குல அம்மன் கலைக்குழுவின் உடுக்கிசை, கைதடி மத்தி குமரநகர் சனசமூக நிலையத்தின் கும்மி நடனம், சாவகச்சேரி ஜோன்சன் நடனக்கல்லூரியின் கோலாட்டம், கொடிகாமம் மந்துவில் கிழக்கு திருமதி த கலைச்செல்வியின் கரகம், மற்றும், அரிவி வெட்டும் பாடல் போன்ற நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன.
இவ் விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எஸ் எம் சார்ள்ஸ் பெரும்பாலும் சம்பிரதாயங்களாக மட்டுமே மாறிவரும் எம் பாரம்பரிய கொண்டாட்டங்களும் கலைநிகழ்வுகளுக்கும் மத்தியில் இவ் விழாவில் அரங்கேறிய கலைநிகழ்வுகள் மனதிற்கு மகிழ்வையும் நிறைவையும் தருவதாக குறிப்பிட்டார்.
இன்றைய இளைய தலைமுறையின் உணர்வறிந்து தேவையறிந்து பெற்றோர்களும் ஆசிரியர்களும் மற்றும் பெரியவர்களும் பொறுப்புடனும் கண்டிப்புடனும் நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தை நினைவுபடுத்தினார். பிள்ளைகள் இளைஞர்கள் தொடர்பில் விழிப்புடனும் அவதானத்துடனும் இருந்து முளையிலேயே தவறுகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்த பெற்றோர்களும் பெரியவர்களும் முயற்சி எடுக்க வேண்டிய அவசியத்தையும் ஆளுநர் தனதுரையில் வலியுறுத்தினார்.
இந்த மாகாணத்தில் எல்லாவற்றையும் மேம்படுத்தி மக்களை நிம்மதியாகவும் சுபீட்சமாகவும் வாழ வைக்க தான் எடுக்கும் பணிகளுக்கு ஒத்துழைப்பு தருமாறும் இதை இப் பொங்கல் விழாவின் செய்தியாக தான் மக்களுக்கு குறிப்பிட விரும்புவதாகவும் தனதுரையில் தெரிவித்தார்.