வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலாகப் பணியாற்றி 06.10.2025 அன்று மணி விழாக் கண்ட ம.கிருபாசுதன் அவர்களின் பிரிவுபசாரமும் சேவை நலன் பாராட்டு விழாவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பங்கேற்புடன் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை (08.10.2025) நடைபெற்றது.
விழா நாயகன் அவர்தம் பாரியாருடன் விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு, மேடை நிகழ்வுகள் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய ஆளுநர், திட்டமிடல் சேவையில் மூத்த – 22 ஆண்டுகள் அனுபவமுள்ள ஒருவர் இன்று ஓய்வுபெற்றுச் செல்கின்றார். அவர் எந்தக் கலந்துரையாடலிலும் யாருக்கும் பயப்படாமல் தனது கருத்தை துணிந்து கூறக்கூடியவர். எமது மாகாணத்துக்கான அபிவிருத்திக்காக அவர் துணிந்து குரல் கொடுத்திருக்கின்றார். அவருக்கு ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதைச் செய்து முடிக்கும் வல்லமையுள்ளவர்.
நாங்கள் பணியாற்றிய காலங்களில் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்திருந்தோம். அவரும் எவ்வாறான அழுத்தங்களை எல்லாம் சந்தித்தார் என்பது தெரியும். ஓய்வின் பின்னர் தான் உடல்நலத்தில் கவனம் செலுத்தி குடும்பத்துடன் சந்தோசமாக இருக்கலாம். அவரும் அவ்வாறு நீண்ட காலம் இருக்க வாழ்த்துகின்றேன், என்றார் ஆளுநர்.
பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடலின் ஊழியர் நலன்புரிச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.