வடக்கு மாகாண பண்பாட்டுப் பெருவிழா – 2024

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டில் 17.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிமுதல் மன்னார் நகரசபை மண்டபத்தில் ‘கலைத்தவசி’ கலைஞர் (குழந்தை) செ.செபஸ்தியான் அரங்கில் வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களின் தலைமையில் வெகுசிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் உயர்திரு.நா.வேதநாயகன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் திரு.இ.இளங்கோவன் அவர்களும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்களும், கௌரவ விருந்தினராக நானாட்டான் நாட்டுக்கூத்து கலைஞர் கலாபூணம் செ.மாசிலாமணி அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இவர்களுடன் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளர், கணக்காளர், மன்னார் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், பண்பாட்டலுவல்கள் அலகின் கலை ஆலோசனைக்குழு தலைவர் திரு.த.சிவகுமாரன் (தமிழருவி), கலை ஆலோசனை குழு உறுப்பினர்களான வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ், முனைவர்.திருமதி.மனோன்மணி சண்முகதாஸ், கலாபூசணம் வல்லிபுரம்  ஏழுமலைப்பிள்ளை, கலாநிதி.கந்தையா ஸ்ரீகணேசன், அதிபர்.திரு.சி.நாகேந்திரராசா ஆகியோரும், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூத்த கலைஞர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் பண்பாட்டு ஊர்திகள் மற்றும் கலை ஆற்றுகைகள் சகிதம் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு பண்பாட்டுப்பவனி ஆரம்பமாகி விழா மண்டபத்தினை வந்தடைந்தது. பண்பாட்டுப்பவனியில் மங்கல வாத்தியம், இன்னியம் நிகழ்வு, வேடப்புனைவு, குதிரைஆட்டம், புரவிநடனம், கும்மி, காவடியாட்டம், சுளகு நடனம், களிகம்பு, சிங்கள நடனம், அண்ணாவியார் பாடல், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், உடுக்கு, மயிலாட்டம், ஒயிலாட்டம், நாட்டுக்கூத்து, குடமுதற்கும்மி, கிராமியக்கதம்பம், சிலம்பம் போன்ற பாரம்பரிய கலைகளும், வடமாகாணத்தின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட 11 ஊர்திகளும் நிகழ்வினை அலங்கரித்தன.

தொடர்ந்து பாரம்பரிய பொருட்கள், நூல்கள் கொண்டமைந்த கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டு விருந்தினர்களால் பார்வையிடப்பட்டது. தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்த பின்னர்  விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு மன்னார் மாவட்ட பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்களினால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு மேடை நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. முதல் நிகழ்வாக சாவகச்சேரி பிரதேச திரு.க.உருத்திரமூர்த்தி கலைக்குழுவினரின் மங்கல வாத்திய இசையும், மன்னார் எழுத்தூர் பிரதேசத்தைச் சேர்ந்த தீந்ஷா நிருத்தியோதயம் கலாமந்திர் மாணவர்களின் வரவேற்பு நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன.  வட மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருமதி.லா.நிருபராஷ் அவர்களினால் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் திரு.அ.பத்திநாதன் அவர்களால் அரங்கத் திறப்புரையும், கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டன.

தொடர்ந்து வவுனியா பிரதேச சிதம்பரேஸ்வரம் நடனாலய மாணவர்களின் ‘தமிழியம்’ நடனநிகழ்வு  அனைவரது மனங்களையும் ஈர்த்தது.  பின்னர் முல்லைத்தீவு, முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி மாணவர்களின் இசைநிகழ்வும், வவுனியா தெற்கு நேர்த அ(ப்)பி கலாமன்றக்குழுவினரின் கண்டிய நடனமும் விழாவினை மேலும் மெருகூட்டின.

மன்னார் மாவட்டச் செயலாளர் அவர்களினால் சிறப்பு விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டிற்கான வடந்தை நூல் வெளியிடப்பட்டது. கல்வி அமைச்சின் செயலாளரினால் கௌரவ ஆளுநருக்கு முதற்பிரதி வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர், கௌரவ விருந்தினருக்கும் பிரதிகள் வழங்கப்பட்டன.

தொடர்ச்சியாக  நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து வடக்கு மாகாண கௌரவ ஆளுநரினால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாண பிரதேச ஒஸ்மானியக்கல்லூரி மாணவர்களின் றபான் நடனமும், கிளிநொச்சி கரைச்சி பிரதேச ஜானு அரங்காற்றுகையகம்  மாணவர்களின் உழவர் நடனமும், யாழ்ப்பாணம், சாவகச்சேரி கைதடி இயல்ஷேத்திரா மாணவர்களின் வாள் நடனமும் தொடர்ச்சியாக மேடையினை அலங்கரித்தன.

அதனைத்தொடர்ந்து விருதுவழங்கும் நிகழ்வானது ஆரம்பமானது. மூத்த கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற கலைக்குரிசில் விருது இம்முறை 13கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் வளர்ந்துவரும் இளம்கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்ற இளங்கலைஞர்விருது இம்முறை 10 கலைஞர்களுக்கும், 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நூற்பரிசு 14நூலாசிரியர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நிறைவாக மன்னார், முருங்கன் பிரதேச முத்தமிழ் கலாமன்றத்தினரின் ‘கல் சுமந்த காவலர்கள்’ என்ற நாட்டுக்கூத்து மேடை நிகழ்ச்சியினை நிறைவு செய்தது. கரைத்துறைப்பற்று பிரதேச கலாசார உத்தியோகத்தர் திருமதி பு.மணிசேகரம் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து மன்னார் நகர பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் தமிழ்மொழி வாழ்த்துடன் வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது பிற்பகல் 2.00 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.