வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 29.10.2022 சனிக்கிழமை காலை 8.30 மணிமுதல் யா/நெல்லியடி மத்திய கல்லூரி கந்தையா நடேசு (தெணியான்) அரங்கில் வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன் அவர்களின் தலைமையில், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களின் ஒழுங்கமைப்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர்.எஸ்.எம். சமன் பந்துலசேன அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன் அவர்களும், கௌரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழக ஓய்வுநிலை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த.கலாமணி அவர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். இவர்களுடன் வடமாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், உதவிச் செயலாளர், அமைச்சின் நிர்வாகத்திற்கான பிரதிப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர், வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், தீவக வலயக்கல்விப் பணிப்பாளர், யாழ் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரவெட்டி உதவி பிரதேச செயலாளர், பருத்தித்துறை உதவிப் பிரதேச செயலாளர், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை செயலாளர், கரவெட்டி பிரதேசசபை உபதவிசாளர், நெல்லியடி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் கலை ஆலோசனைக்குழு உறுப்பினர்களான முனைவர் ச.மனோன்மணி, பேராசிரியர்.எஸ்.கிருஸ்ணராஜா, திரு.நா.வை.மகேந்திரராசா, திரு.ச.லலீசன் ஆகியோரும் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வின் ஆரம்பத்தில் பண்பாட்டு ஊர்திகள் கரவெட்டி மூத்தவிநாயகர் கோயிலிலிருந்து ஆரம்பித்து நெல்லியடிச் சந்தியினூடாக சென்று நெல்லியடி மத்திய கல்லூரியை அடைந்தன. இவ் நான்கு ஊர்திகளும் “வடமராட்சியின் இயற்கை எழிலும் தனித்துவமும்” (மருதங்கேணி பிரதேச செயலகம்), “வடமராட்சியின் கலைப்பாரம்பரியமும் எழுச்சியும்” (கரவெட்டி பிரதேச செயலகம்), “தமிழ் மொழியின் சிறப்பும் வளர்ச்சியும்” (பருத்தித்துறை பிரதேச செயலகம்) , “இன நல்லிணக்கமும் பல் கலாசார ஒன்றிணைப்பும்” (கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகம்) போன்றவற்றினை பிரதிபலிப்பனவாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பண்பாட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த விருந்தினர்கள், மற்றும் வருகை தந்திருந்த அனைவரும் தடங்கன் புளியடி முருகமூர்த்தி கோயிலில் ஆலய வழிபாட்டினை நிறைவு செய்த பின்னர் பாரம்பரிய கலை நிகழ்வுகளான குடமுதற்கும்மி, ஒயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், சிலம்படி, வாள்நடனம் போன்ற பாரம்பரிய கலைநிகழ்வுகளைக் கொண்ட பண்பாட்டு ஊர்வலங்களின் மத்தியில் மாலை அணிவிக்கப்பட்டு இயக்கச்சி அ.த.க. பாடசாலை மாணவர்களின் இன்னியம் இசைக்கச்சேரியுடன் நெல்லியடி மத்திய கல்லூரியின் நிகழ்வு மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். குடமுதற்கும்மி எனும் பாரம்பரிய நடனமானது ஒட்டிசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கவிடயமாகும். தொடர்ந்து விருந்தினர்களால் மங்கல விளக்கேற்றப்பட்டு தமிழ்த்தாய்க்கு மாலை அணிவித்த பின்னர் அமிர்தவாஹினி இசைமன்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. முதல் நிகழ்வாக கரவெட்டி, உடுப்பிட்டி மற்றும் பருத்தித்துறை பிரதேச கலைஞர்களின் மங்கல வாத்திய இசையும், கரவெட்டி குருஷேத்திரம் நடனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன. பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளரினால் வரவேற்புரையும் அதனைத் தொடர்ந்து யாழ்பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் திருவாளர் த. அஜந்தகுமார் அவர்களால் அரங்கத் திறப்புரையும், கல்வி அமைச்சின் செயலாளரினால் தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டன.
தொடர்ந்து கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சிவகலை நாட்டியாலயா மாணவர்களின் சிவதாண்டவ நடனம் ஒரு புத்துருவாக்க நடனமாக அமைந்து அனைவரது மனங்களையம் ஈர்த்தது. பின்னர் வவூனியா மடுகந்த கலாசார மத்திய நிலைய மாணவர்களின் சிங்கள கிராமிய நடனம், மன்னார் கலார்ப்பணா நாட்டியப்பள்ளி மாணவர்களின் கிறிஸ்தவ பண்பாட்டு நடனம் மற்றும் முல்லைத்தீவு நுண்கலைக் கல்லூரி, கண்ணகி கலாமன்றம் மாணவர்களின் பாம்பு நடனம் ஆகிய நிகழ்வுகள் விழாவினை மேலும் மெருகூட்டின. யாழ் மேலதிக மாவட்டச் செயலாளரினால் சிறப்பு விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டுக்கான கலைக்குரிசில் விருது இம்முறை 16 கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கௌரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வவுனியா தமிழ்ச்சங்க அமைப்பாளர் தமிழருவி த.சிவகுமாரன் அவர்களால் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் அருமையான கருத்துக்கள் அடங்கிய சிறப்புச் சொற்பொழிவொன்றும் நிகழ்த்தப்பட்டது.
தொடர்ச்சியாக 2022 ஆம் ஆண்டிற்கான வடந்தை நூல் வெளியிடப்பட்டது. தகைசார் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களால் வடந்தை நூலுக்கான தொகுப்பாசிரியர் உரை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் பிரதமசெயலாளரினால் கௌரவிக்கப்பட்டார். வடந்தை நூலின் பிரதியினை விருந்தினர்கள், சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர்கள், கலை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் போன்றோர் பெற்றுக் கொண்டனர். நூல் வெளியீட்டினைத் தொடர்ந்து திருவாளர் த.றொபேட் மற்றும் குழுவினர்களின் ஈழத்தின் தமிழிசை அரங்க நிகழ்வு இடம்பெற்றது. இவ்விசை நிகழ்ச்சியானது எந்தவித சினிமா கலப்புமற்ற எமது பண்பாட்டு இசையாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பின்னர் யா/ஒஸ்மானியா கல்லூரி மாணவர்களின் றபான் நடனமும் மேடையினை அலங்கரித்தது. தொடர்ந்து வடமாகாண பிரதம செயலாளரினால் பிரதம விருந்தினர் உரை நிகழ்த்தப்பட்டது. இவ்வுரையினை பிரதம செயலாளர் அவர்கள் தமிழ்மொழியிலே வழங்கியிருந்தமை மிகவும் சிறப்பான விடயமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கல்வி அமைச்சின் செயலாளரினால் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். அதன் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான இளங்கலைஞர்விருது இம்முறை 12 கலைஞர்களுக்கும், சிறந்த நூற்பரிசு 10 நூலாசிரியர்களுக்கும்; வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இறுதியாக பருத்தித்துறை பிரதேச கலைஞர்களின் இசை நாடகம் மேடை நிகழ்ச்சியினை நிறைவு செய்தது. யாழ். மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி சு.விஜயரத்தினம் அவர்களின் நன்றியுரையினைத் தொடர்ந்து யா/நெல்லியடி மத்திய கல்லூரி மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்துடன் வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவானது பிற்பகல் 4.15 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.