வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையோடு இணைந்து நடாத்திய வடக்கு மாகாண சிவராத்திரி தினமானது 2026.02.15ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 05.30மணிக்கு முதலாம் சாமப் பூஜைக்குரிய அபிஷேகத்துடன் ஆரம்பமாகி இரவு 7.00 மணிவரை நடைபெற்றது.
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையில் மேடைநிகழ்வுகள் இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகியது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து தேவஸ்தானத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ ரஞ்சித கீர்த்திவாசக் குருக்களது ஆசியுரை, பண்பாட்டலுவல்கள் அலகின் உதவிப்பணிப்பாளர் திருமதி தர்சினி நிதர்ஷன் அவர்களது வரவேற்புரை, வவுனியா பரத நர்த்தன கலாலயா மாணவர்களது வரவேற்பு நடனம் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு ம.பற்றிக் டிறஞ்சன் அவர்களது தலைமையுரையுடன் கலைநிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் தேவஸ்தான முகாமைத்துவ சபையின் ஏற்பாட்டிலும் முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய பல்வேறு கிராமங்களையும் சேர்ந்த கலைமன்றங்கள் மற்றும் கலைஞர்களது பக்திபூர்வமான கலைநிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. முள்ளியவளை ஐயனார் நாடக கலாமன்றம், துணுக்காய் ஆரணி நர்த்தனாலய, ஒட்டுசுட்டான் மலரும் முல்லை கலாலய, அளம்பில் விரலிசை மன்றம் முள்ளியவளை நுண்கலைக்கல்லூரி, மாங்குளம் முத்தமிழ் கலாமன்றம், மாந்தை கலையருவி கலாமன்றம், ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம், ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் அறநெறிப்பாடசாலை, கல்யாண வேலவர் அறநெறிப்பாடசாலை, மல்லாவி ஆரணி நர்த்தனாலய போன்ற மன்றங்களில் இருந்து விநாயகர் ஸ்துதி, சிவவர்ணம், அக்னி லிங்கஸ்துதி, விரலிசைநாதம், குழுஇசை, கீர்த்தனை நடனம், காவடி நடனம், வில்லுப்பாட்டு திருமதி சாந்தா தர்சன் ஆசிரியரது மாணவர்களது நடன ஆற்றுகைகள் என்பனவும் சிறப்பாக மேடையை அலங்கரித்தன
சிவராத்திரி தினத்தில் கலைநிகழ்வுகளை வழங்கிய மாணவர்களுக்கும் அவற்றினை நெறியாளுகை செய்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ்களுடன் அன்பளிப்புப் பொருள்களும் வழங்கி வைக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் அவர்களின் நன்றியுரையுடன் அதிகாலை 5.00 மணிக்கு சிவராத்திரி தின மேடை நிகழ்வுகள் நிறைவுபெற்றன.















