வடக்கு மாகாண சபையின் புதிய பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் பதவியேற்றார்

வடக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக திருமதி. தனுஜா முருகேசன் அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நியமனத்தினூடாக 27 மே 2025 அன்று வடக்கு மாகாண சபை கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள பிரதம செயலாளர் செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட செயலாளர் – யாழ்ப்பாணம், மாவட்ட செயலாளர் – மன்னார், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், மாகாண சபை வளாகத்திலுள்ள அலுவலக உத்தியோகத்தர்கள், நலன் விரும்பிகள் ஆகியோர் பிரதம செயலாளர் அவர்களை பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.

பிரதம செயலாளர் அவர்கள் சமய அனுட்டாணங்களுடன் காலை 10:22 மணியளவில் அமைந்த சுபநேரத்தில் கையொப்பமிட்டு தனது கடமைகளை ஆரம்பித்தார்.

இந் நிகழ்வில் வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவர், அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் பிரதிப் பிரதம செயலாளர்கள் புதிய பிரதம செயலாளருக்கு தமது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

பிரதம செயலாளர் தனது உரையில் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் தனது நன்றிகளை பரிமாறிக் கொண்டதுடன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு இணங்க வடக்கு மாகாணத்தினை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல அனைத்து உத்தியோகத்தர்களும் ஊழலற்ற, வினைத்திறனான, அர்ப்பணிப்புடனான சேவையை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.