மக்கள் எங்களைத்தேடி வரக்கூடாது. மக்களுக்கான சேவைகளை முன்னெடுக்கும் அலுவலர்கள்தான் மக்களைத் தேடிச்சென்று அவர்களது குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொடுக்கவேண்டும். அதற்கு அமைவாகவே பின்தங்கியுள்ள தீவுகளுக்கான எமது மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்தப்படுகின்றது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். அத்துடன் இந்த மக்கள் குறைகேள் சந்திப்பில் மக்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன.
வடக்கு மாகாண சபையின் ஒழுங்கமைப்பில் மக்கள் குறைகேள் சந்திப்பு இன்று வியாழக்கிழமை (07.08.2025) அனலைதீவில், அனலைதீவு ஹரிகர புத்திர ஜயனார் ஆலயச் சுற்றாடலிலுள்ள மண்டபத்தில் நடைபெற்றது.
‘பணத்தையும், நேரத்தையும் விரயம் செய்து எமது அலுவலகங்களை ஒவ்வொன்றாகத் தேடி மக்கள் அலைவதைவிட அனைத்து அலுவலர்களையும் உங்களிடம் அழைத்து வந்தால் உங்கள் பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் என்ற கௌரவ ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு அமைவாக குறைகேள் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது’ என வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் குறிப்பிட்டார்.
ஆளுநர் தனது உரையில், அரசாங்கம் கூட மக்களின் பிரச்சினைகளைத் தேடிச் சென்று தீர்க்குமாறே கூறுகின்றது. அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூட அண்மையில், மக்களுக்குச் சேவை செய்யும் நிறுவனங்கள் மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார். அலுவலகங்களிலிருந்தால் மக்களின் முன்னுரிமைகளை எம்மால் கண்டறிய முடியாது. இவ்வாறான களப் பயணங்கள், குறைகேள் சந்திப்பிலேயே மக்களின் முன்னுரிமைகளை எம்மால் இனம்காண முடியும் எனக் குறிப்பிட்டார்.
அனலைதீவிலுள்ள பேருந்து அடிக்கடி பழுதடைவதாக மக்கள் குறிப்பிட்டனர். அடுத்த கட்டமாக யாழ். மாவட்டத்துக்கு பேருந்துகள் வழங்கப்படும்போது கடல்கடந்த தீவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் புதிய பேருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தன்னால் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் இதன்போது தெரிவித்தார். பாடசாலைக்கு ஆசிரியர்கள் உரிய நேரத்துக்கு வருவதற்கு ஏதுவாக படகுப் பயண நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் படகுச் சேவைகளை நடத்துபவர்களை அழைத்து கலந்துரையாடல் நடத்தி நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு ஊர்காவற்றுறை பிரதேச செயலருக்கு, ஆளுநர் ஆலோசனை வழங்கினார்.
இந்திய மற்றும் குருநகர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களில் இழுவைமடிப் படகுகளால் பாதிப்பை எதிர்கொள்வதாக மீனவர்கள் குற்றம் சுமத்தினர். இந்திய மீனவர்களின் வருகை கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாக கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதி குறிப்பிட்டார். அத்துடன் இலங்கையில் குறிப்பிட்ட சில இடங்களில் இழுவைமடி மீன்பிடிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் குருநகரைச் சேர்ந்த மீனவர்கள் அதனை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். குருநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்களின் படகுகளால் ஏதாவது பாதிப்பு ஏற்படுவது ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டால் அதற்குரிய இழப்பீடு சம்பந்தப்பட்ட சங்கத்திடமிருந்து பெற்று வழங்கப்படுவதாகவும் ஆளுநருக்கு அவர் சுட்டிக்காட்டினார். இதன்போது, இழப்பீடு அறவிடுவதுடன் மாத்திரமல்லாது மீண்டும் அதே தவறை அவர்கள் இழைத்தால் அவர்களுக்கான அனுமதியை இரத்துச் செய்யவேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தினார்.
அதேநேரம், குருநகர் மீனவர்களின் இழுவைமடிப் படகுகள் கண்ணகை அம்மன் கோயிலடியில் நிறுத்தப்படுவதால் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அந்தப் படகுகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை முன்வைத்தனர். இதற்குரிய நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் இது தொடர்பான கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளதாகவும் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் குறிப்பிட்டார்.
அனலைதீவிலிருந்து நோயாளர்களைக் கொண்டு செல்வதற்கான நோயாளர்காவு வண்டிப் படகுக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனைக் கொள்வனவு செய்து வழங்குவதற்கான நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அனலைதீவு பிரதான வீதியை அகலித்து புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் பிரதேச சபை ஊடாக அதனைச் செய்து தர முடியும் என பிரதேச சபையின் தவிசாளர் அன்னராசா தெரிவித்தார்.
அனலைதீவு மேற்கு கடற்கரை வீதியை புனரமைக்கவேண்டும் என மக்கள் கோரினர். கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டத்தில் 2.1 கிலோ மீற்றர் உள்வாங்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்களால் பதிலளிக்கப்பட்டது. அதேநேரம், அனலைதீவு மடத்தடி வீதியை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக புனரமைக்கவும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். வீதிப் புனரமைப்பின்போது கடந்த காலங்களில் மதகு இருந்த இடத்தில் மதகு அமைத்தே புனரமைக்குமாறு மக்கள் கேட்டுக்கொண்டனர்.
மக்கள் பணவைப்பு மற்றும் பணம் மீளப்பெறலுக்கு ஏற்றவாறு வங்கிச் சேவை ஒன்று தமது தீவில் அமைக்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதேச செயலர் குறிப்பிட்டார்.
கலங்கரை விளக்கு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது அமைக்கப்படும் எனவும் இறங்குதுறையில் 5 சோலர் மின்விளக்குகளும் பொருத்தப்படும் என்றும் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள பிரதிநிதியால் தெரிவிக்கப்பட்டது. மேற்கு கடலோரத்தில் கடலணை அமைப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான நிதியைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்வதாக ஆளுநர் பதிலளித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படாத அரச காணிகளை மீளப்பெற்று காணியில்லாதவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உள்;ராட்சி அமைச்சின் செயலாளரும் பதில் காணி ஆணையாளருமான அ.சோதிநாதன் குறிப்பிட்டார்.
மிளகாய் விதைகளை உரியகாலத்தில் கிடைக்கப்பெறச் செய்யவேண்டும் என விவசாயிகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன் விவசாயப் போதனாசிரியர்களை தோட்டங்களுக்கு வந்து மாதத்தில் ஒரு தடவையாவது பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கச்செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டது. அதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பணித்தார். மாவட்ட விவசாயப் பணிப்பாளரால் தொடர்பு இலக்கமும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
ஊர்காவற்றுறை பிரதேச சபை வருமானம் குறைந்த பிரதேச சபை என்ற அடிப்படையில் தற்போதுள்ள நிலையில் சபையின் வருமானத்தில் 20 சதவீதத்தை ஊழியர்களின் சம்பளத்துக்கு வழங்குவது என்பது சுமையாகவுள்ளமையால் இரண்டு ஆண்டுகளுக்கு அதை விலக்களித்து உதவவேண்டும் என சபைத் தவிசாளர் கோரிக்கை முன்வைத்தார். இது தொடர்பில் உள்;ராட்சி அமைச்சுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தவிசாளரின் இணைப்பாளர் சு.கபிலன் பதிலளித்தார்.
மக்கள் குறைகேள் சந்திப்பு முடிவடைந்த பின்னர் புளியந்தீவு இறங்குதுறையை ஆளுநர் சென்று பார்வையிட்டார். அந்த இறங்குதுறை புனரமைப்பை உலக வங்கியின் திட்டத்தின் கீழ் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு பணித்ததுடன், அதற்கான இணைப்பு வீதியை வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் குறிப்பிட்டார்.
இறுதியாக அனலைதீவு சதாசிவம் மகாவித்தியாலயத்தையும் ஆளுநர் சென்று பார்வையிட்டார். அதிபர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். சுகல பாடங்களுக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாமை தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டது. கடல்கடந்த தீவகப் பிரதேசங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுத்து செயற்படுமாறு வலயக் கல்விப் பணிப்பாளரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். மேலும், அனலைத்தீவைச் சேர்ந்த ஆசிரியர்கள் வெளியிடங்களில் பணியாற்றினால் அவர்களை மீளவும் அனலைதீவிலுள்ள பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகளையும் ஆராயுமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.
ஆளுநரின் குறைகேள் சந்திப்பில், பிரதம செயலாளர், கௌரவ தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், ஆளுநரின் செயலாளர், உள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், ஊர்காவற்றுறை பிரதேச செயலர், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளர், கடற்றொழில் அமைச்சரின் பிரதிநிதி, வடக்கு மாகாண உள்;ராட்சி ஆணையாளர், வீதி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் மாகாணப் பணிப்பாளர்கள், வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், மாகாண சுதேச வைத்தியத்துறையின் ஆணையாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார மருத்துவ அதிகாரி, உள்;ராட்சி உதவி ஆணையாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், கடலோர பாதுகாப்புத் திணைக்களம், கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம், இலங்கை மின்சார சபை, இலங்கை போக்குவரத்துச் சபை, நீர்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.