அரச சேவைக்கு நியமனம் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவரும் தாம் அமரும் கதிரைக்குப் பாரமாக இல்லாமல், அந்தக் கதிரைக்குப் பெருமை சேர்க்கக் கூடிய வகையில் பணியாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி மன்றங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட 14 வருமான பரிசோதகர்களுக்கான (Revenue Inspectors) நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, அண்மையில் (01.12.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இயற்கைப் பேரிடர் காரணமாக எளிமையாக நடைபெற்ற, இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:
பலர் ஓய்வூதியத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு அரச சேவையை நாடுகின்றனர். ஆனால், இது மக்களுக்குச் சேவை செய்வதற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒரு பாக்கியமாகும். இச்சந்தர்ப்பத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் சொந்தத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவ்வாறானவர்களாக நீங்கள் இருக்கக் கூடாது.
உங்களிடம் சேவை நாடி வரும் பொதுமக்கள் அனைவரும் உங்கள் உறவினர்களே. அவர்களை இன்முகத்துடன் வரவேற்று, நேர்மையாகவும், விரைவாகவும், அன்பாகவும் சேவை செய்ய வேண்டும்.
இன்று உள்ளூராட்சி மன்றங்கள் ஒவ்வொன்றும் தங்களது வருமானத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அந்த வருமானத்தைத் திரட்டிக் கொடுப்பதில் வருமானப் பரிசோதகர்களான உங்களின் பங்கு அளப்பரியது. நீங்கள் நேர்மையாகச் செயற்பட்டால்தான் சபைகளின் வருமானம் அதிகரிக்கும். உங்களின் பணியின் கனதியை உணர்ந்து நீங்கள் செயற்பட வேண்டும்.
நீங்கள் வடக்கு மாகாணத்திற்காகவே தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றத் தயாராக இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவைப்படும் மேலதிக பயிற்சிகளை வழங்கி உங்களை வழிப்படுத்த மாகாண நிர்வாகம் தயாராக உள்ளது, என்றார்.
இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாணத்துக்கு 131 வருமானப் பரிசோதகர் ஆளணி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 51 வெற்றிடங்கள் காணப்பட்டன. அதில் 14 வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போது அனுமதி கிடைக்கப்பெற்றதற்கு அமைவாகவே இந்த நியமனங்கள் வழங்கப்படுகின்றன, எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம் மற்றும் பயிற்சியும் ஆளணியும்), வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அமைச்சின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.








