வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகு நடாத்திய வட மாகாண ஒளி விழாவானது 2024.12.27 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் முல்லைத்தீவு வண்ணாங்குளம் புனித இராயப்பர் ஆலயத்தில் பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப் பணிப்பாளர் திருமதி லா.நிருபராஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவின் முதன்மை விருந்தினர்களாக வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் திரு.ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். இவர்களுடன் விருந்தினர்களாக மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு உதவி மாவட்ட செயலாளர், முல்லைத்தீவவு வலயக்கல்வி பணிப்பாளர், துணுக்காய் வலயக்கல்வி பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காளர், கரைத்துறைப்பற்று உதவி பிரதேச செயலாளர், ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் பிராந்திய முகாமையாளர், முல்லைத்தீவு கிளை முகாமையாளர், இலங்கை வங்கி பிராந்திய முகாமையாளர் மற்றும் மதகுருமார்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு, ஒளியேற்றி மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. இறைவணக்கத்தை தொடர்ந்து பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் அவர்களால் வரவேற்புரையும், தலைமையுரையும் நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிலாவத்தை இந்திராலயா நர்த்தனாலய மாணவர்களின் வரவேற்பு நடனமும், புனித இராயப்பு ஆலய மறைக்கல்வி மாணவர்களின் கரோல் கீதமும் இடம்பெற்றது. நத்தார் ஆசிச்செய்திகளினை வணக்கத்துக்குரிய அருட்பணி அன்ரனிப்பிள்ளை அகஸ்ரின் அடிகளாரும், வணக்கத்துக்குரிய சிவஸ்ரீ சோம ஜனார்த்தன குருக்கள் அவர்களும்இ, வணக்கத்துக்குரிய மௌலவி நௌபால் அவர்களும் வழங்கியிருந்தார்கள்;. அதனைத் தொடர்ந்து மாங்குளம் முத்தமிழ் கலாமன்ற மாணவர்களின் பாலன் பிறப்பு நடனமும், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் அண்ணா கலைக்கழகம் மாணவர்களின் நடனமும் தொடர்ச்சியாக மேடையை அலங்கரித்தன.
தொடர்ச்சியாக முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் அவர்களாலும் கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களினாலும் விருந்தினர் உரைகள் நிகழ்த்தப்பட்டன. விருந்தினர் உரையினைத் தொடர்ந்து பத்மபிரியா நடனாலய மாணவர்களின் தேவன் பாதம் பணிந்து நடனமும், புனித இராயப்பு ஆலய மறைக்கல்வி மாணவர்களின் நடனநிகழ்வும், நுண்கலைக்கல்லூரி கண்ணகி கலாமன்றம் மாணவர்களின் குழு நடனமும், புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் இளையோர் அமைப்பினரது கோலாட்ட நடனமும் நிகழ்வினை அலங்கரித்தன.
கலைநிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் அக்சியோ ஹெலிக்ஸ், இலங்கை வங்கி, ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் நிறுவனங்களின் அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் 205 பாடசாலை மாணவர்களுக்கு கல்வி மேம்பாட்டிற்காக புத்தகப்பை, கொப்பி, குடை என்பன வழங்கி வைக்கப்பட்டன. தொடர்ந்து கரைத்துறைப்பற்று கண்ணகி கலாமன்றத்தினருக்கும், ஒட்டுசுட்டான் மாங்குளம் முத்தமிழ் கலாமன்றத்தினருக்கும் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட இசைக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
நத்தார் தாத்தா வருகையானது நிகழ்வினை மேலும் மெருகூட்டியது. நிகழ்வில் கலந்து கொண்ட சிறுவர்களுக்கு இனிப்பு பொருட்களும், விளையாட்டுப் பொருட்களும் நத்தார் தாத்தாவால் வழங்கப்பட்டது. நிறைவாக முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட கலாசார உத்தியோகத்தர் செல்வி.இ.மதியரசி அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வானது பி.ப 12.30 மணியளவில் இனிதே நிறைவுபெற்றது.