வடக்கு மாகாண இளையோர் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் மீது கொண்டுள்ள நம்பிக்கை கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களை விட உயர்ந்த நிலையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது எமக்குச் சாதகமான விடயமாகும். இந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, அதனை ஒருபோதும் சிதைக்காத வகையில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் அமைய வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.
‘இளைஞர் நிலவரக் குறியீடு: இலங்கையில் உள்ளடக்கிய ஆட்சிக்கான இளைஞர்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகளைப் பதிவுசெய்தல்’ என்ற ஆய்வறிக்கையின் வடக்கு மாகாண அறிக்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (19.08.2026) புதன்கிழமை கைதடியிலுள்ள, வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டமைப்புகளின் மன்றம் மற்றும் உள்ளூராட்சி ஆட்சியில் இளைஞர்கள் திட்டத்தின் கீழ், கனடா அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியின் மூலம் வடக்கு மாகாண இளையோரின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் உள்ளூராட்சி ஆட்சியில் அவர்களின் பங்கேற்புக்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுக் கண்டறிவுகள் முன்வைக்கப்பட்டன.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், இன்று முன்வைக்கப்பட்டுள்ள ஆய்வு முடிவுகள் வெறுமனே தகவல்களாகக் கருதப்படக் கூடாது என்றும், அவை உள்ளூராட்சி மன்றங்கள் தங்களைத் தாமே சுயபரிசோதனை செய்து கொண்டு, தமது சேவைகள் மற்றும் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான முக்கிய வாய்ப்பாக அமைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆய்வு முடிவுகளின்படி, வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் சேவைகள் மீது 65 சதவீதமான இளையோர் நம்பிக்கை வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இது உள்ளூராட்சி கட்டமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க பலமாகும் என்றார். இந்நம்பிக்கையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதற்கும், மேலும் அதிகளவிலான இளையோரை உள்ளூராட்சி செயற்பாடுகளுக்குள் இணைத்துக்கொள்வதற்கும் டிஜிட்டல் மயப்படுத்தல் முக்கிய பங்காற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆய்வில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை உள்ளூராட்சி மன்றங்களின் மேயர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆழமாக உள்வாங்கிக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்கள் பங்களிப்பை உள்ளூராட்சி நிர்வாகத்தில் மேலும் அதிகரிப்பதற்கான நடைமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இளைஞர்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிர்வாகத் தீர்மானங்களில் பிரதிபலிக்கச் செய்வது உள்ளடக்கிய நல்லாட்சியின் முக்கிய அம்சமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உள்ளூராட்சி மன்றங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் தொடர்பாக மாற்றம் அவசியம் என்பதை வலியுறுத்திய ஆளுநர், தமக்குத் தெரிவிக்கப்பட்ட ஒரு கசப்பான அனுபவத்தை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றமொன்றில் சேவையைப் பெறச் சென்ற ஓய்வுபெற்ற முகாமையாளர் ஒருவர், அங்கு சேவை வழங்கிய உத்தியோகத்தரால் மதிப்புக் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு நடத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், பொதுமக்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்தும் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேவேளை, உள்ளூராட்சி மன்றங்களை வலுப்படுத்துவதுடன், அவற்றின் ஊடாக பொதுமக்களுக்குத் தேவையான மணலைக் குறைந்த விலையில் வழங்குவதற்கான ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கும் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். இந்நடவடிக்கைகளில் சில அரச திணைக்களங்களின் காலதாமதமான செயற்பாடுகள் தடையாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கங்கள் மாறினாலும், சில திணைக்களங்களில் காணப்படும் முறைகேடான செயற்பாடுகள் தொடர்கின்றன என்ற கவலையை வெளிப்படுத்திய ஆளுநர், அனுமதிகளை வழங்குவதில் தேவையற்ற தாமதங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் புதுப் புதுப் ஆவணங்களைக் கோரி செயற்பாடுகளை இழுத்தடிக்கும் நடைமுறைகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார். இவ்வாறான நடைமுறைகள் பொதுமக்களையும் அரச நிறுவனங்களையும் சோர்வடையச் செய்வதோடு, நியாயமான நிர்வாகத்தை பாதிக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், மக்களின் நலனை முன்னிறுத்திய நிர்வாகத்தை உருவாக்குவதற்கான பயணம் தொடர வேண்டும் என்றும், உள்ளூராட்சி மன்றங்கள் மீது இளையோர் உள்ளிட்ட பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைச் செயற்பாடுகளின் ஊடாக மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.
ஆய்வின் அடிப்படையில் இளையோரின் குரல், தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உள்ளூராட்சி நிர்வாகத்துடன் இணைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் எனவும், இளைஞர்களை வெறுமனே பயனாளிகளாகக் கருதாமல், உள்ளூராட்சி ஆட்சியின் செயற்பாட்டு பங்காளிகளாக இணைத்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தலைவர்கள், பேராசிரியர்கள், மற்றும் மன்றங்களின் செயலாளர்கள், தொடர்புடைய தரப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.




