வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில தொழில்துறைக்கான ஆளணி வெற்றிடங்களை நிரப்புவதற்கான அனுமதி நேற்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் விரைவில் அவை நிரப்பப்படும் எனவும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை காலை (17.07.2025) கடற்றொழில், நீரியல்வளங்கள் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இ.சந்திரசேகர் தலைமையில் இடம்பெற்றது.
யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபனின் வரவேற்புரையைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான ஆளுநரின் உரை இடம்பெற்றது. இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,
வடக்கு மாகாணத்துக்கு கடந்த ஆண்டுகளை விட 3 மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை விரைந்து – வினைத்திறனாக செலவு செய்து முடிக்கவேண்டும். எமக்கு ஒதுக்கப்பட்ட நிதி நூறு வீதமும் இந்த ஆண்டு இறுதிக்குள் செலவு செய்து முடிக்கப்படும். அதேநேரம் இதன் விளைவுகளையும் நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். மக்களுக்கு இதனால் எவ்வாறான பயன்கள் ஏற்பட்டன என்பது தொடர்பிலும் ஆராய வேண்டும். அதேநேரம், அடுத்த ஆண்டுக்கான திட்டங்களையும் இப்போதே தெரிவு செய்து முன்னுரிமை அடிப்படையில் இறுதிப்படுத்த வேண்டும். அபிவிருத்திப் பணிகள் சமச்சீராக கிடைக்கப்பெறுவதை பிரதேச செயலர்கள் உறுதிப்படுத்தவேண்டும், என்றார் ஆளுநர்.
ஆளுநரின் உரையைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் அமைச்சருமான இ.சந்திரசேகர் உரையாற்றினார். அதன் பின்னர் கடந்த கூட்ட அறிக்கையை அங்கீகரித்தல், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான திட்டங்கள் என்பன சமர்ப்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. இதன் பின்னர் மாகாண நிதியில் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் ஆராயப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், க.இளங்குமரன், ஜெ.றஜீபன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, இ.அருச்சுனா, வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள், யாழ். மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், கௌரவ உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.