மருத்துவமனைகளின் நற்பெயரைப் பாதுகாப்பதிலும், நோயாளர் சேவைகளைத் திருப்திகரமான முறையில் வழங்குவதிலும் மருத்துவமனை மேற்பார்வையாளர்களுக்கு மிகப் பெரிய பொறுப்பு உண்டு என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் சுமார் 10 ஆண்டுகளின் பின்னர் ‘மருத்துவமனை மேற்பார்வையாளர்’ பதவி உயர்வுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வு ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03.03.2026) ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் தற்போது 39 மருத்துவமனை மேற்பார்வையாளர் வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், இன்று 20 பேருக்கு மாத்திரமே பதவி உயர்வு நியமனங்கள் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இதற்கான விசேட பரீட்சையில் தோற்றியவர்களில் 22 பேர் சித்தியடைந்திருந்த நிலையில், நேர்முகத் தேர்வின் ஊடாக 20 பேர் மாத்திரமே தகுதிபெற்றுத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது விசேட உரையாற்றிய ஆளுநர் நா.வேதநாயகன், தற்போது பதவி உயர்வுகள் வழங்கப்படுவதால், நிர்வாகத்தின் கீழ் நிலையில் புதிய வெற்றிடங்கள் உருவாகின்றன. அந்த வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவது எமக்குச் சவாலானதொரு விடயமாகும். இருப்பினும், உரிய காலத்தில் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்களுக்கு அதனை வழங்க வேண்டும் என்பதற்காக நாம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்து, அனைத்துப் பதவியணிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்,’ என்றார்.
மேலும் கருத்துத் தெரிவித்த ஆளுநர், ‘மருத்துவமனைகள் தொடர்பாக மக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. எதிர்காலத்தில் அவ்வாறான முறைப்பாடுகள் வராத வகையில் உங்களின் சேவைகள் அமைய வேண்டும். மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளர்கள் முகம் சுழிக்காதவாறு, மருத்துவமனையின் சூழல் சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய முழுமையான பொறுப்பு உங்களுடையதே ஆகும். நேர முகாமைத்துவத்தை மிகவும் இறுக்கமாகக் கடைப்பிடிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, நோயாளர்களுடனான உங்களின் உறவு அன்பானதாகவும் கரிசனைமிக்கதாகவும் அமைய வேண்டும், என வலியுறுத்தினார்.
இந்த நியமனங்கள் வழங்கும் நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், சுகாதார அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்), மற்றும் சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.




