வடக்கு மாகாணத்தில் வரலாற்றில் அதிகூடிய சிறுபோக நெல் விளைச்சல்; விவசாயிகளின் நெல்லை விரைவாகக் கொள்வனவு செய்ய பொறிமுறைகளைத் துரிதப்படுத்த ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக சிறுபோகத்தில் அதிகூடிய நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விவசாயிகள் தமது விளைபொருட்களை சந்தைப்படுத்துவதில் எதிர்நோக்கும் சிரமங்களுக்கு உடனடி தீர்வை வழங்கும் வகையில் நெல் கொள்வனவு பொறிமுறைகளை விரைவுபடுத்த வேண்டும். திறைசேரியால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் ஊடாக வட்டியில்லாக் கடன் அடிப்படையில் நெல் கொள்வனவை விரைவாக முன்னெடுக்க வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை வழங்கினார்.

வடக்கு மாகாணத்தில் சிறுபோக நெல் கொள்வனவு தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று (19.08.2026) புதன்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகளின் நெல்லைச் சந்தைப்படுத்துவதற்கான தற்போதைய நிலைமை, நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடான கொள்வனவு மற்றும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்வனவு பொறிமுறையை நடைமுறைப்படுத்துதல் தொடர்பில் இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் 2024ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 96,456 மெட்ரிக் தொன், 2025ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 129,083 மெட்ரிக் தொன், 2026ஆம் ஆண்டு சிறுபோகத்தில் 156,326 மெட்ரிக் தொன் நெல் விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை சிறுபோகத்தில் கணிசமான அளவில் அதிகரித்துள்ள இவ்விளைச்சல், வடக்கு மாகாணத்தின் விவசாய உற்பத்தித் திறனில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

எனினும், எதிர்பார்த்ததை விட அதிகளவான விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், நெல் சந்தைப்படுத்தல் சபையால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மேற்கொள்ளப்பட்ட நெல் கொள்வனவு பெருமளவில் நிறைவடைந்துள்ளதுடன், இன்னமும் கணிசமான எண்ணிக்கையிலான விவசாயிகள் தமது நெல்லை சந்தைப்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகக் கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் அதிகபட்சம் 200 மெட்ரிக் தொன் வரையில் நெல் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையால் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, விவசாயிகளிடமுள்ள நெல்லை இயன்றளவு விரைவாகக் கொள்வனவு செய்து, அவர்களின் வருமானச் சுழற்சி பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஆளுநர் வலியுறுத்தினார்.

இதேவேளை, அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கைக்கு அமைவாக, பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வட்டியில்லாக் கடனாக 25 மில்லியன் ரூபா வழங்கி, அவர்கள் ஊடாக நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல்லைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கடன் மாவட்டச் செயலர்கள் ஊடாக வழங்கப்பட்டு, எட்டு மாதங்களுக்குள் மீளச் செலுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தப் பொறிமுறையின் மூலம் விவசாயிகளிடமிருந்து பெருமளவில் நெல்லைக் கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், கடன் வழங்குதல் முதல் நெல் கொள்வனவு வரை அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி முன்னெடுக்குமாறு ஆளுநர் பணிப்புரை வழங்கினார்.

இக்கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றைக் களைய மேற்கொள்ள வேண்டிய நடைமுறைத் தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்பட்டு திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் மாங்குளம் அலுவலகத்தைப் புனரமைப்பது தொடர்பிலும், நெல் கொள்வனவுக்கான விண்ணப்பப் படிவங்களை கமநல சேவை நிலையங்கள் ஊடாக விவசாயிகளுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இவ்விடயங்களில் சாதகமான நிலைப்பாடுகள் எட்டப்பட்டன.

இனிவரும் காலங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 50 கிலோ மற்றும் 250 கிலோ நிறையுள்ள பொதிகளில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயிகளின் உற்பத்திக்கு உரிய சந்தையை உறுதிப்படுத்துவதும், அறுவடைக்குப் பின்னர் நெல்லை நியாயமான விலையில் விற்பனை செய்யக்கூடிய சூழலை உருவாக்குவதும் விவசாயத் துறையின் நிலைத்தன்மைக்கு மிகவும் முக்கியமானது என ஆளுநர் குறிப்பிட்டார். அதிகரித்துள்ள நெல் விளைச்சலை விவசாயிகளுக்கு பொருளாதார பலனாக மாற்றுவதற்கு, உற்பத்தியுடன் இணைந்த சந்தைப்படுத்தல் பொறிமுறையும் அதே வேகத்தில் செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மற்றும் பிரதிப் பொதுமுகாமையாளர் இணையவழி ஊடாகக் கலந்துகொண்டனர். மேலும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், மன்னார் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலர்கள், வடக்கு மாகாண விவசாயப் பணிப்பாளர், மேலதிகப் பணிப்பாளர், கமநலத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்கள், மாவட்ட விவசாயப் பணிப்பாளர்கள், நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.