வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படல் வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்

வடக்கு மாகாணத்துக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது குறித்த முறையான ஆய்வும் மதிப்பீடும் அவசியமென வடக்கு மாகாணத்தின் 2026ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடலின் போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (27.12.2025) மாலை, 2026 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தித் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின்போது, வடக்கு மாகாணத்தின் 5 அமைச்சுக்களாலும், அவற்றின் கீழுள்ள திணைக்களங்களாலும் 2026ஆம் ஆண்டில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் குறித்தும், பிரதேச மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இ.சந்திரசேகர், ஒதுக்கப்படும் நிதியில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் ஊடாக மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் ஆக்கபூர்வமான மாற்றங்களை மதிப்பீடு செய்வது காலத்தின் தேவையாகும், எனக் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், அத்திட்டங்கள் தொடர்பான முறையான மீளாய்வு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என வலியுறுத்தினார்.

ஒவ்வொரு திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், கூட்டுறவுத்துறை பிரதி அமைச்சரும் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்களுமான ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், எஸ்.சிறிபவானந்தராஜா, ஜெ.றஜீவன் ஆகியோரும், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களும் கலந்துகொண்டனர்.