வடக்கு மாகாணத்தில் முன்பள்ளி சிறார்களுக்கான ‘சத்துமா’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

உலக வங்கியின் அனுசரணையுடன் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைவாக வடக்கு மாகாண பிரதம செயலாளரின் வழிகாட்டலில் இந்நிகழ்ச்சித்திட்டமானது நடைமுறைப்படுத்தப்படுகிறது. வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சு, கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியன ஒருங்கிணைந்து இந்நிகழ்ச்சித் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர்.

முன்பள்ளி மாணவர்களை போசணைக் குறைபாடுகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தில் வடமாகாணம் முழுவதிலுமுள்ள 1600 முன்பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த ‘சத்துமா’ வழங்கும் செயற்பாடு 02.05.2023 ஆம் திகதி அன்று மாகாணம் முழுவதிலுமுள்ள முன்பள்ளிகளில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக பிரதம செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஒவ்வொரு முன்பள்ளிகளிலும் மரநடுகை மேற்கொள்ளப்பட்டமை சிறப்பம்சமாகும்.