வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத கனியவள அகழ்வு மற்றும் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற அவசர விசேட உயர்மட்டக் கலந்துரையாடலில் தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆளுநர் செயலகத்தில் இன்று (28.03.2026) சனிக்கிழமை இரவு 7.30 மணியிலிருந்து 8.45 மணி வரையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் கௌரவ இ.சந்திரசேகர் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர்.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த கௌரவ அமைச்சர் இ.சந்திரசேகர், கொடிகாமத்தில் சட்டவிரோத மணல் கடத்தலைக் கட்டுப்படுத்த முனைந்த பொலிஸ் அலுவலர் உயிரிழந்த சம்பவத்துக்குத் ஆழ்ந்த இரங்கல்களை வெளிப்படுத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அவர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான உயிரிழப்புகள் தொடர்கதையாக உள்ளமையை விசனத்துடன் சுட்டிக்காட்டிய அவர், மணல் மாபியாக்களிடமிருந்து எமது மாகாணத்தை மீட்டெடுப்பதற்கான பொறிமுறை அவசரமாக உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
கௌரவ ஆளுநர் தனது உரையில், கடந்த 10ஆம் திகதி புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவரை அழைத்து ஆளுநர் செயலகத்தில் நடத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களைக் குறிப்பிட்டதுடன், அவை விரைவில் நடைமுறைக்கு வரும்போது மணல் விலை கணிசமாகக் குறையும் எனத் தெரிவித்தார். அந்தச் சாத்தியமான பொறிமுறையின் ஊடாக மணல் விலை குறையும்போது மாபியாக்களின் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், பொலிஸாரால் மாத்திரம் இதனைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் தனதுரையில், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு – விநியோகம் தொடர்பான விவகாரம் உயிர் அச்சுறுத்தலான ஒன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அந்தத் துன்பியல் இப்போது நடந்தேறியிருக்கின்றது எனத் தெரிவித்தார். அத்துடன் சட்டவிரோ மணல் அகழ்வுக்கு எதிராகக் குரல் கொடுப்போர் மட்டுமல்ல அவற்றை எடுத்துச் செல்லும் வாகனங்களின் அதிவேகம் காரணமாகவும் பலர் உயிரிழந்ததையும் சுட்டிக்காட்டினார்.
அதன் பின்னர் நடைபெற்ற கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்டன.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்கும் நோக்கில், இரவு நேரங்களில் மணல் கொண்டு செல்வதற்கு முற்றாகத் தடை விதிப்பதற்கும், பகல் நேரங்களில் மாத்திரம் மணல் விநியோகத்தை மேற்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு மணல் கொண்டு வருவதற்கான அனுமதியை உடனடியாக நிறுத்துவதற்கு உரிய பொறிமுறையூடாக நடவடிக்கை எடுப்பதற்கும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பொலிஸாரும் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளும் இணைந்து விசேட வீதிச்சோதனைகளை மேற்கொள்வதுடன், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் வாகனங்களைக் கைப்பற்றி பொலிஸ் நிலையங்களுக்குக் கொண்டு சென்று மணலை ஏலத்தில் விடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டது.
குளத்து மணலைக் கழுவி உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக விநியோகிப்பதன் மூலம் குறைந்த விலையில் மக்களுக்கு மணலைப் பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இது மணல் மாபியாக்களின் ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், வடக்கு மாகாணத்தில் இதுவரை வழங்கப்பட்ட மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரங்களில் செயற்பாட்டு நிலையிலுள்ளவை தொடர்பான விவரங்களைப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் வழங்கவேண்டும் என்றும், எதிர்காலத்தில் பொலிஸார், மாவட்டச் செயலாளர்கள், ஆளுநர் செயலகம் இணைந்த குழுவில் அதனை இற்றைப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதன் ஊடாக மணல் அகழப்படும் இடங்கள் பொலிஸாருக்குத் தெரியவருவதுடன், அகழப்படும் மணல் கொண்டு செல்லும் பாதைகளை அறியமுடிவதன் மூலம் ஏனைய மார்க்கங்களில் செல்லும் மணல் வாகனங்களைப் பிடிப்பதற்கும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், மணல் விநியோக வாகனத்துக்கு அனுமதிப் பத்திரம் வழங்கும்போது எவ்வளவு மணி நேரத்துள் அதனை விநியோகிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பது குறித்தும் ஆராயப்பட்டது.
கனரக வாகனங்களின் வேகக்கட்டுப்பாட்டை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்கும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாகப் பாடசாலை நேரங்களில் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், சட்டத்தை மீறுவோருக்கு எதிராகத் தண்டப்பணங்களை விதிப்பதை நடைமுறைப்படுத்தவும் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது. எதிர்காலத்தில் கனியவளங்கள் தேவைப்படுபவர்கள் பிரதேச செயலகங்கள் ஊடாக விண்ணப்பிப்பதற்கும், அதன் ஊடாகத் தேவைப்படும் மணலின் அளவு கணிக்கப்பட்டு ஒரு நாளில் எவ்வளவு மணல் விநியோகம், எந்த மார்க்கம் ஊடாக நடைபெறும் என்ற விவரங்கள் துல்லியப்படுத்தப்படுவதன் ஊடாக மணல் மாபியாக்களைக் கட்டுப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் புத்திக சிறிவர்தன, யாழ்ப்பாணப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாறப்பன, யாழ். பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா, புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் வடபிராந்திய முகாமையாளர் டி.மயூரன், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் இணைப்பாளர் சு.கபிலன் ஆகியோர் நேரடியாகப் பங்கேற்றனர். மேலும், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏனைய பிரதேசங்களின் பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் சூம் காணொலித் தொழில்நுட்பம் ஊடாகவும் பங்கேற்றனர்.



