“வடக்கு மாகாணத்தில் எண்ணிய ஆளுகையின் புதிய யுகம் ஆரம்பம்; ஊழலற்ற நிர்வாகத்திற்கு இது வழிகோலும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் உரை.

வடக்கு மாகாண முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம், கற்றல் முகாமைத்துவக் கட்டமைப்பு மற்றும் பயிற்சி முகாமைத்துவக் கட்டமைப்பு ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (25.02.2026) மாலை கிளிநொச்சியிலுள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவன கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இப்புதிய கட்டமைப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், இது வெறுமனே ஒரு இணையத்தளத்தையோ அல்லது மென்பொருளையோ ஆரம்பித்து வைக்கும் நிகழ்வல்ல எனவும், வடக்கு மாகாண நிர்வாகத்தின் எண்ணிய ஆளுகையின் புதிய யுகத்தின் ஆரம்பம் எனவும் தெரிவித்தார். பாரம்பரிய நிர்வாக முறைமைக்கும், எண்ணியமயப்படுத்தப்பட்ட உலகத்தின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளுக்கும் இடையிலான இடைவெளியை இணைக்கும் ஒரு பாலமாக இத்திட்டம் அமைந்துள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய எண்ணியமயமாக்கல் கொள்கையுடன் ஒன்றிணைந்ததாக முன்னெடுக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் ஊடாக, தொழில்சார் மேம்பாட்டுக்குத் தடையாக இருக்கும் பௌதிக ரீதியான தடைகள் தகர்க்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், ‘யாழ்ப்பாணம், கிளிநொச்சி அல்லது முல்லைத்தீவு என ஒரு அதிகாரி எங்கு கடமையாற்றினாலும், உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வளங்களை இனி அவர்கள் தமது விரல் நுனியில் பெற்றுக்கொள்ள முடியும். இது ஒரு தொழில்நுட்ப மேம்பாடு என்பதை விட மேலானது; எமது மிக முக்கியமான சொத்தான ‘மனித வளத்தின்’ மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு மூலோபாய முதலீடாகும். தொழில்நுட்ப அறிவுள்ள, சுறுசுறுப்பான மற்றும் 21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக உள்ள ஒரு அரச உழைப்பாளர் படையை நாம் இதன்மூலம் உருவாக்கி வருகிறோம்,’ எனத் தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்த ஆளுநர், ‘கால ஓட்டத்துக்கு ஏற்ப அரச நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களைப் புகுத்துவதில் பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன் அவர்கள் முன்னிலையில் இருக்கின்றார். அவரது இந்தச் சிறப்பான செயற்பாட்டை நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அதேபோன்று, முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனம் கிளிநொச்சியில் அமைந்திருப்பது மிகவும் பொருத்தமானதாகும். ‘எல்லாமே யாழ்ப்பாணத்தில்தான் அமைய வேண்டும்’ என்ற சிந்தனையை நாம் மாற்றியமைக்க வேண்டும்,’ எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்தின் எண்ணியமயமாக்கல் கொள்கையூடாக அரச சேவையிலுள்ள தாமதங்கள் மற்றும் ‘சிவப்பு நாடா முறைமைக்கு’ (Bureaucracy) முற்றுப்புள்ளி வைக்கப்படுவது மட்டுமன்றி, ஊழல் மற்றும் இலஞ்சம் போன்ற சீர்கேடுகளும் முழுமையாக ஒழிக்கப்படும் என ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இப்புதிய கட்டமைப்புகளை வெறும் ‘கருவிகளாக’ அல்லது ‘கடமைகளாக’ மட்டும் பார்க்காது, நிர்வாக மாற்றத்துக்கான வினையூக்கிகளாகக் கருதிச் செயற்படுமாறு அரச அதிகாரிகளைக் கேட்டுக்கொண்ட ஆளுநர், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்களின் திறனைப் பொறுத்தே அத்தொழில்நுட்பத்தின் வெற்றியும் அமையும் என வலியுறுத்தினார். அத்துடன், மாகாணத்தின் முன்னேற்றத்துக்கு அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பே இயந்திரமாகச் செயற்படுகின்றது எனக் குறிப்பிட்ட அவர், இத்திட்டத்தை நனவாக்குவதற்கு அயராது உழைத்த முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் இணையத்தள அபிவிருத்திக் குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.

நிகழ்வுக்குத் தலைமை தாங்கிய பிரதிப் பிரதம செயலாளர் (ஆளணியும் பயிற்சியும்) செ.பிரணவநாதன், இந்த இணையக் கட்டமைப்புகளின் உருவாக்கம் மற்றும் அதனூடாக எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் தொடர்பாகத் தெளிவுபடுத்தினார். முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் தனது வரவேற்புரையில், நிறுவனத்தின் செயற்பாடுகளுக்காக இந்த ஆண்டு கடந்த காலங்களை விட 4 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா முருகேசன், பிரதிப் பிரதம செயலாளர்கள், முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.