“வடக்கு மாகாணத்தில் அமையவுள்ள மூன்று முதலீட்டு வலயங்கள்: இம்மாத இறுதியில் சாத்தியவள அறிக்கை கையளிப்பு!” – ஆளுநர் தலைமையில் ஆராய்வு

வடக்கு மாகாணத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள மூன்று மிகப் பெரிய முதலீட்டு வலயங்கள் மற்றும் அவற்றில் எதிர்பார்க்கப்படும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான கலந்துரையாடல், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று சனிக்கிழமை (03.01.2026) காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இம்முதலீட்டு வலயங்கள் தொடர்பான விரிவான சாத்தியவள ஆய்வு அறிக்கையானது, இம்மாத இறுதிக்குள் இலங்கை முதலீட்டுச் சபைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முன்னேற்றங்கள் மற்றும் அறிக்கையில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

குறித்த முதலீட்டு வலயங்களில் எத்தகைய கைத்தொழில்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கலாம் என்பது தொடர்பிலான பரிந்துரைகளைப் பெறுவதற்காக, அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் கருத்துகள் இதன்போது கேட்டறியப்பட்டன. அத்துடன், அடுத்தக்கட்டமாக உள்ளூர் முதலீட்டாளர்கள், முதலீட்டு வலயங்கள் அமையவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடனான சந்திப்புகளை விரைவில் நடத்துவதெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இம்முதலீட்டு வலயங்கள் அமைக்கப்படுவதால் மாகாணத்தில் ஏற்படும் பொருளாதார நன்மைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, உருவாக்கப்படவுள்ள பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கு ஏற்ற வகையில், எமது மாகாண இளையோரைத் தகுதியுடையவர்களாகத் தயார்படுத்துவது தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் (காணி), பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்) ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலகின் பணிப்பாளரும், முதலீட்டுச் சபையின் சாத்தியவள ஆய்வின் செயற்றிட்ட இணைப்பாளரும், விவசாய பீடாதிபதியுமான பேராசிரியர் க.பகீரதன், மருத்துவ பீடாதிபதி மருத்துவர் கே.சுரேந்திரகுமார், மூத்த விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் அடங்கிய நிபுணத்துவக் குழுவினரும் பங்கேற்றனர்.