வடக்கில் தொழில்நுட்ப அலுவலர்களுக்கான 66 வெற்றிடங்களை முழுவதுமாக நிரப்புவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. – கௌரவ ஆளுநர்

வடக்கு மாகாண இலங்கை தொழில்நுட்பவியலாளர் சேவைச் சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடலும் சேவைநலன் பாராட்டு விழாவும் கே.கே.எஸ். வீதி நாச்சிமார் கோயிலுக்கு அண்மையிலுள்ள திவ்ய மஹாலில் நேற்று சனிக்கிழமை மாலை (26.07.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், விசேட விருந்தினராக ஓய்வுபெற்ற பிரதம செயலாளர் இ.இளங்கோவனும் கலந்துகொண்டனர்.

ஆளுநர் தனது பிரதம விருந்தினர் உரையில் தெரிவித்ததாவது,

பல தொழிற்சங்கங்கள் வடக்கில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தொழிற்சங்கங்களும் அந்தத் தொழிலுக்குரியனவாக இருக்கின்றன. சில தொழிற்சங்கங்கள், தாங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்ளப்போகின்றோம், அதற்கு முன்னதாக என்னைச் சந்திக்க வேண்டும் என்று கேட்பார்கள். அப்படியான சங்கங்களுக்கு, முதலில் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தி முடித்து விட்டு வாருங்கள். அதன் பின்னர் கதைப்போம் என்றுதான் நான் எனது பொதுமக்கள் தொடர்பு அலுவலர் ஊடாகச் சொல்வதுண்டு.

ஆனால் உங்களின் தொழிற்சங்கம் மிகவும் வித்தியாசமானது. ஆரம்பத்திலிருந்தே உங்கள் தொழிற்சங்கத்தின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்திருந்தது. இதை நான் பல தடவைகள் ஏனைய தொழிற்சங்கங்களுக்கு கூட முன்னுதாரணமாகச் சொல்லியிருக்கின்றேன். பெரும்பாலான தொழிற்சங்கங்கள் தங்கள் அங்கத்தவர்களின் நலன்களை முதன்மைப்படுத்தியே கோரிக்கைகளை முன்வைப்பார்கள். தங்களுக்குத் தேவையான சலுகைகளை உறுதிப்படுத்திக்கொள்வதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உங்கள் தொழிற்சங்கம் என்னை முதல் தடவை சந்தித்ததிலிருந்து, தங்களின் தொழில்மேம்பாட்டுக்கு எவ்வாறான உதவிகள் தேவை என்பதையே முதன்மைப்படுத்திக்கோரி வந்திருக்கின்றார்கள்.

நீங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் தொடர்பில் எனக்குத் தெரியும். பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். இங்கிருந்துதான் வடக்கின் ஏனைய மாவட்டங்களுக்குச் சென்று பணியாற்றுகின்றீர்கள். அதேநேரம் வடக்கில் அனைத்து வகையான தொழில்நுட்ப அலுவலர்களுக்குமான 66 வெற்றிடங்கள் காணப்பட்டன. அதனை முழுவதுமாக நிரப்புவதற்கு எங்களுக்கு கடந்த வாரம் அனுமதி கிடைத்துள்ளது.

மேலும், கட்டுமானங்களைப் பொறுத்தவரையில் தொழில்நுட்ப சேவை என்பது மிக முக்கியமானது. நீங்கள் எங்கள் மாகாணத்துக்கு மக்களுக்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டுகின்றோம், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.