யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைய நிர்வாகத்தினருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று ஆளுநர் செயலகத்தில் இன்று (07.04.2026) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் யாழ். மாவட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடு, சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் எதிர்காலச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மாகாணத்தின் அபிவிருத்தியை முன்னிறுத்தி, கொழும்பில் உள்ள நிதியளிக்கும் நிறுவனங்கள், தூதரகங்கள் மற்றும் பல்வகை அமைப்புக்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து விசேட மாநாடொன்றை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக இணையப் பிரதிநிதிகள் இதன்போது ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். வளைகுடாப் பகுதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இம்மாநாடு சற்றுத் தாமதமாகிய போதிலும், நிலைமைகள் சீரடைந்ததும் வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களுக்குமான நிதி மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இம்மாநாட்டை நடத்துவதற்கு ஆளுநரின் ஆலோசனையும் வழிகாட்டலும் கோரப்பட்டது.
மேலும், வடக்கு மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களின் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையங்களையும் ஒருங்கிணைத்து ‘வடக்கு மாகாண அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம்’ ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் இதன்போது முன்வைக்கப்பட்டது. இதற்காக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 5 பிரதிநிதிகளை அழைத்து ஆளுநர் செயலகத்தில் கூட்டமொன்றை நடத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், அரச திணைக்களங்களில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் சிவில் சமூகத்தின் குரலைப் பிரதிபலிக்கும் வகையில், சமூகப் பிரதிநிதிகளாக இணையத்தின் உறுப்பினர்களுக்கும் உரிய சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மற்றும் காணியற்ற நிலையில் வாழும் கூலித்தொழிலாளர் குடும்பங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆழமாகக் கலந்துரையாடப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்தவர்களே அதிகளவில் போதைப்பொருள் பாவனை, வாள்வெட்டு போன்ற சமூக விரோதச் செயல்களுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதால், அவர்களைச் சமூக நீரோட்டத்தில் இணைக்க வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டது. பத்தாண்டுகளுக்கு மேலாக எவராலும் உரிமை கோரப்படாத காணிகளில் வசிக்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு, திணைக்களத் தலைவர்களை ஒருங்கிணைத்துக் காணி உரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, மாகாண இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் அவர்களை வலுவூட்டுவது தொடர்பிலும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இணையப் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்திய கௌரவ ஆளுநர், பொதுமக்களின் நலன் கருதி மாகாண நிர்வாகத்தால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். அத்துடன், மாகாணத்தின் சமூக, பொருளாதார மேம்பாட்டிற்காக சிவில் சமூக அமைப்புக்களுடன் எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவதற்கான முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.




