யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலை அதிபர்கள் கௌரவ ஆளுநரை சந்தித்துக் கலந்துரையாடினர்.

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.

நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே அந்தப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது எனவும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்பட்டு அந்தக் கொடுப்பனவும் கிடைக்காமல் போனால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் அதிபர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதேநேரம், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஏனைய அரச பணியாளர்களுக்கு ஆபத்துக்கொடுப்பனவு (risk allowance) வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆசிரியர்களுக்கு அது இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் நேரடியாக தொடர்புடைய அமைச்சுக்களுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.