கார்கில்ஸ் நிறுவனம் யாழ்ப்பாணம் நகரத்திலுள்ள கார்கில்ஸ் தொகுதியில் ஒழுங்கமைத்த ‘மென் திறன்களை மேம்படுத்தும் திட்டத்தின்’ (Cargills “ELEVATE” Soft Skills Development Program) தொடக்க நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை (05.08.2025) கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய ஆளுநர், எமது இளையோரை மேம்படுத்த கார்கில்ஸ் நிறுவனம் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன்.
இன்றைய உலகம் வேகமாக மாறி வருகிறது. கல்வி மற்றும் தொழில்நுட்ப அறிவு மிக முக்கியமானது என்றாலும், மென் திறன்களின் தேர்ச்சி – தொடர்பு, குழுப்பணி, தகவமைப்பு மற்றும் நம்பிக்கை அடிப்படையில் தனிநபர்களை வேறுபடுத்தி வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கின்றது.
இந்த சமூகப் பொறுப்பு முயற்சியின் மூலம், கார்கில்ஸ் வணிக சிறப்புக்கான அதன் அர்ப்பணிப்பை மட்டுமல்ல, சமூகத்தின் முன்னேற்றத்துக்கான தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளது. எமது இளையோரை வேலைவாய்ப்புக்கு ஏற்ற, அவர்களின் முழுத் திறனையும் அடையத் தயாராக இருக்கும் தலைமுறையை வளர்க்க நீங்கள் உதவுகிறீர்கள்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளையோராகிய அனைத்து பங்கேற்பாளர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இங்கு சொல்லித் தரப்படுபவற்றை உள்வாங்கிக் கொள்ளுங்கள், கற்றுக்கொள்ளுங்கள், வளருங்கள். நீங்கள் பெறும் ஒவ்வொரு புதிய திறமையும் உங்கள் கனவுகளுக்கும், எமது மாகாணம் மற்றும் நாட்டுக்குள் ஒரு நேர்மறையான சக்தியாக உங்களைக் கொண்டுவருகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள், என்றார் ஆளுநர்.