யாழ்ப்பாண நகரம் நெரிசல் மிக்கதாகவும் நெருக்கடி மிக்கதாகவும் மாறியுள்ளது. அவற்றை ஒழுங்கமைக்க – சீரமைக்க வேண்டியதேவை, பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அதற்கு அமைவாக நெடுந்தூர, குறுந்தூர பேருந்துச் சேவைகள் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படவேண்டியுள்ளது என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் புதிய பேருந்து நிலையத்தின் இயங்குநிலை தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (14.10.2025) நடைபெற்றது.
கலந்துரையாடலின் ஆரம்பத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன், கூட்டத்தின் நோக்கம் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், யாழ். நகரத்தில் பேருந்து நிலையம், மருத்துவமனை, வர்த்தக நிலையங்கள் என்பன அமைந்துள்ளன. இதனால் யாழ். நகரின் எதிர்கால அபிவிருத்தி நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. ஏனைய மாவட்டங்களிலுள்ள நகரத்தைப்போன்று எமது நகரைத்தையும் மாற்றுவதற்கு ஒத்துழைக்கவேண்டும். எல்லோருக்கும் நகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் உள்ளது. எனவே அதை நோக்கியதாக பேருந்து நிலையத்தின் செயற்பாடுகளை நாம் ஒழுங்குபடுத்தவேண்டும், என்றார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து தொடர்பான செயற்குழுவின் தலைவருமான க.இளங்குமரன், பொதுப்போக்குவரத்தை மக்களின் தேவைக்கானதாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்கு. தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை என்பன இணைந்து செயற்பட வேண்டும். அதனடிப்படையிலேயே யாழ். மாவட்டத்திலும் சேவைகள் நடைபெறவேண்டும் என எதிர்பார்க்கின்றோம், என்றார்.
இதன் பின்னர் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், யாழ். நகரப் பகுதியிலிருந்து பேருந்து நிலையம் அகற்றப்பட வேண்டும் என்பதே நிபுணர்கள், பொது அமைப்புக்களின் கருத்தாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை யாழ். நகரத்தின் இயங்கு நிலை என்பது பேருந்து நிலையத்தின் செயற்பாட்டில் தங்கியுள்ளது. குறுந்தூர சேவைகளை இரு தரப்பும் தற்போதுள்ள பேருந்து நிலையத்திலிருந்தும், நெடுந்தூர சேவைகளை புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரு தரப்பும் முன்னெடுப்பதன் ஊடாக நகரத்தின் நெரிசல் குறைவடையும் என ஆளுநர் கருத்து வெளியிட்டார். யாழ்ப்பாண பிரதேச செயலர் சா.சுதர்சனும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இலங்கை போக்குவரத்துச்சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே.கேதீசன், பேருந்து நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட 63 கடைகளிலிருந்தும் நாளொன்றுக்கு தலா 500 ரூபா வீதம் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவரின் அனுமதியுடன் அறவிடப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் இந்தப் பேருந்து நிலையத்தை புனரமைக்கும்போது அந்தக் கடைகள் அகற்றப்படும் என பிரதேச செயலர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்வது தொடர்பில் தொழிற்சங்களை அழைத்துக் கலந்துரையாடவேண்டும் எனத் தெரிவித்தார்.
இதன் பின்னர் கலந்துரையாடலில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன. நகர அபிவிருத்தி அதிகார சபை தமது முன்மொழிவுகளையும் தெரியப்படுத்தினர்.
புதிய பேருந்து நிலையத்தை இயங்கச் செய்வது தொடர்பில் முதலில் கள ஆய்வை மேற்கொள்வது என இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நகர அபிவிருத்தி அதிகார சபையினர், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினர், வர்த்தக சங்கத்தினர், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.