யாழ்ப்பாணத்தை முன்மாதிரி சுகாதார நகரமாக மாற்றும் திட்டத்தில், வெறும் பேச்சுக்களை விடுத்து நடைமுறைச் சாத்தியமான விடயங்களை உடனடியாகச் செயற்படுத்த வேண்டும். அடுத்த கலந்துரையாடலுக்கு முன்னதாக, உறுதியான முன்னேற்றங்களை காண்பிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் திட்டவட்டமான பணிப்புரையை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் சுகாதார நகரத் திட்டம் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல், உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கலாநிதி ராஜேஸ் பாண்டேவ் அவர்களின் பங்கேற்புடன், இன்று (22.12.2025) திங்கட்கிழமை மாலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஆளுநர், ‘இத்திட்டமானது யாழ்ப்பாண மாநகர சபை, யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் வடக்கு மாகாண சபை ஆகியன ஒன்றிணைந்து முன்னெடுக்கும் ஒரு கூட்டு முயற்சியாகும். சிறந்த உட்கட்டமைப்பு, மருத்துவ நிபுணத்துவம் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, யாழ்ப்பாணத்தை ஒரு ‘முன்மாதிரி சுகாதார நகரமாக’ மாற்றுவதே எமது இலக்காகும். இதில் நகரின் உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுக காண்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும், என்று வலியுறுத்தினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி ராஜேஸ் பாண்டேவ் கருத்துத் தெரிவிக்கையில், ‘வடக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட பேரிடரின் பின்னரான சூழலை நான் நேரில் அவதானித்தேன். ஒரு சுகாதார நகரத் திட்டமானது மக்களின் பங்கேற்புடனேயே முழுமையடையும். சமூகத்தின் தேவைகள் என்ன? எது சாத்தியம்? என்பது குறித்து மக்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றே இத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும், என்று சுட்டிக்காட்டினார்.
இத்திட்டம் குறித்துப் பலமுறை பேசப்பட்டாலும், பல விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற தகவல் வெளியிடப்பட்டது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் யாழ். மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்ரோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
நீண்ட காலத் தேவைகள் ஒருபுறமிருக்க, உடனடியாகச் செய்யக்கூடிய வேலைகளையும் தாமதப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த ஆளுநர், விரைவான நடைமுறைப்படுத்தலுக்காக உப குழுவொன்றை அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். மேலும், செயற்பாட்டுப் பட்டியலில் உள்ள சாதாரண விடயங்களை அடுத்த கூட்டத்திற்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்தி முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்குக் காலக்கெடு விதித்தார்.
இக்கலந்துரையாடலில் யாழ். மாநகர சபை கௌரவ முதல்வர், ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்டச் செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.






