இவ்வாண்டிற்கான 3 ஆம் காலாண்டிற்கான ஊராட்சி முற்றக் கூட்டங்கள் வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளன. பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் பிரச்சனைகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி, உள்ளூர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அரச அதிகாரிகள், சமூக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மகளிர் விவகார அமைச்சு, வடக்கு மாகாண சபை மற்றும் அந்தந்த மாவட்ட செயலகங்களின் இணைத் தலைமையில் இக்கூட்டங்கள் நடாத்தப்பட்டன.
இக் கூட்டங்கள் வடக்கு மாகாண சபை மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், உதவிச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர்/மேலதிக மாவட்டச் செயலாளரின் இணைத் தலைமையிலும் கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையிலும் நடைபெற்றன.
இக் கூட்டங்களில் பங்கு பற்றிய மகளிர் குழுக்களின் பிரதிநிதிகள் நேர்த்தியான ஓர் ஒழுங்கு முறைப்படி பிரச்சனைகள் தொடர்பான முன்வைப்புக்களை மேற்கொண்டனர். மக்களது பிரச்சனைகளை அடையாளம் கண்டு கொள்வதற்கும் அவர்களது கருத்துக்களை திறந்த வெளியில் பகிர்ந்து கொள்வதற்கும் பொது விஷயங்கள் குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்குமான களமாக இக் கூட்டம் அமைந்திருந்தது.
ஐந்து மாவட்டக் கூட்டங்களிலும் மொத்தமாக 61 விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டன.