முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். இன்றைய இளையதலைமுறை முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை. – கௌரவ ஆளுநர்

இன்றைய இளம் சமுதாயம் முதியோரை தங்கள் தேவைக்குப் பயன்படுத்திய பின்னர் அவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு சென்று விடும் போக்குத்தான் இப்போது இங்கு அதிகரித்து வருகின்றது. அதனால்தான் முதியோர் இல்லங்கள் உருவாகிக்கொண்டு செல்கின்றன. இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கிளிநொச்சி சிவநகர் கிராம மூத்தோர் சங்கத்தின் ஏற்பாட்டில் முதியோர் கௌரவிப்பு நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை (23.10.2025) சங்க மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் தனது உரையில்,

முதியோர்கள்தான் எங்களின் வழிகாட்டிகள். நல்லது, கெட்டதைச் சொல்லி எங்களை வழிப்படுத்தியவர்கள் முதியோர்கள்தான். அவர்களுடைய அனுபவங்கள்தான் முக்கியமானது. இன்றைய இளையதலைமுறை முதியோர்களை பராமரிக்கத் தவறுவதுடன், முதியோரின் அறிவுரைகளைக் கேட்பதற்குக் கூடத் தயாராக இல்லை.

வன்னிப் பிரதேசத்திலுள்ள பல கிராமங்களை உருவாக்கியவர்கள் இங்குள்ள முதியோர்கள்தான். அவர்கள் தங்கள் மனிதவலுவைப் பிரயோகித்து அவற்றை உருவாக்கியிருக்கின்றார்கள். ஆனால் அவற்றை இப்போது எல்லோரும் மறந்து போகின்றார்கள். இன்றைய தினம் முதியோர்களை கௌரவிப்பதற்கு எடுத்த முயற்சியைப் பாராட்டுகின்றேன், என்றார் ஆளுநர்.

இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும், முதியோர்கள், முன்பள்ளிக் குழந்தைகள் கலந்துகொண்டனர்.